

இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது பெருமை அளிப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 338 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விராட் கோலி (124), ஹர்ஷித் ராணா (52) ஆகியோர் வெற்றிக்காக போராடினர். ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாக மாறியது. 4 ஓவர்கள் முழுமையாக மீதம் இருந்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இது ஒருபுறம் இருக்க இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இதன் மூலம் அந்த அணி இந்திய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. நியூஸிலாந்து அணியின் வெற்றியில் டேரில் மிட்செல் முக்கிய பங்கு வகித்திருந்தார். பேட்டிங்கில் அவர், 137 ரன்களை விளாசியிருந்தார். மேலும் கிளென் பிலிப்ஸுடன் (106) இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
2-வது ஒருநாள் போட்டியிலும் டேரில் மிட்செல் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் 2 சதங்கள், ஒரு அரை சதத்துடன் 352 ரன்கள் குவித்த அவர், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார்.
வெற்றிக்கு பின்னர் டேரில் மிட்செல் கூறியதாவது: விராட் கோலி மற்றும் ஹர்ஷித் ராணா நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். மேலும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் அளவு எங்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியது. நியூஸிலாந்து அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அழுத்தமான சூழலிலும் அமைதியாக செயல்பட்டு எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினோம். கடைசிப் போட்டியில் விளையாடிய விதம் குறித்து இரண்டு அணிகளுமே மிகுந்த பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன்.
கடந்த காலங்களில் பலமுறை நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒவ்வொருமுறை இங்கு வரும்போதும், கற்றுக்கொண்டு வளர்ந்துள்ளோம். ஆனால் தற்போதுள்ள அணியுடன் இங்கு வந்து எங்களிடம் இருக்கும் திறனை வைத்து வெற்றி கண்டது என்பது எங்கள் வீரர்களை உண்மையிலேயே பெருமைப்பட வைக்கும். இந்த வெற்றியால் எங்கள் நாட்டுக்கு புன்னகையுடன் திரும்பிச் செல்வோம்.
எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது எளிதானது கிடையாது. இந்த அணியை கொண்டு வெற்றி பெற்றது நியூஸிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவமே இங்குள்ள ஆடுகளங்களை தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியது. சென்னை, ராஜஸ்தானில் அதிக நேரம் செலவிட்டுள்ளேன். எதிர்காலத்தில் இன்னும் சில முறை இங்கு வருவேன் என்று நம்புகிறேன். இந்தியா சுற்றுப்பயணம் செய்ய சிறந்த இடம். இந்தியரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு டேரில் மிட்செல் கூறினார்.