

பாரிஸ்: ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடர் வரும் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. மதிப்புமிக்க இந்தத் தொடரில் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர்.
உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், இந்த சீசனில் தொடர்ந்து 29 போட்டிகளில் வென்று அசுர ஃபார்மில் உள்ளார். அவருக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் விலகி உள்ளார். இதனால் ஜன்னிக் சின்னர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று தனது ‘கேரியர் கிராண்ட் ஸ்லாம்’ கனவை நனவாக்க முயற்சிக்கக்கூடும்.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார். 39 வயதாகும் ஜோகோவிச்சுக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கக்கூடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெச்ஸாண்டர் ஜிவேரேவ், ஜோகோவிச் இடம் பெற்றுள்ள டிராவில் உள்ளார். இவர்கள் இருவரும் அரை இறுதியில் நேருக்கு நேர் மோத வாய்ப்பு உள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் ஆகியோர் இந்த சீசனோடு ஓய்வு பெறவுள்ளதால், அவர்களுக்கும் இது கடைசி பிரெஞ்சு ஓபன் தொடராக அமைந்துள்ளது.
மகளிர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியைத் தொடர்ந்து ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாமையும் வெல்லக் காத்திருக்கிறார். இவரும் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காஃபும் ஒரே பிரிவில் உள்ளதால், இவர்கள் அரையிறுதியில் நேருக்கு நேர் மோதக்கூடும். 4 முறை பிரெஞ்சு ஓபன் வென்று களிமண் மைதானங்களின் ராணியாகத் திகழும் ஸ்வியாடெக், புதிய பயிற்சியாளரின் கீழ் தனது உத்திகளை மாற்றி அமைத்து 5-வது பட்டத்தைக் குறிவைத்துப் போட்டியிடுகிறார்.
நடப்பு சாம்பியனான கோ கோ காஃப், இந்த சீசனின் களிமண் தரை ஆடுகள போட்டிகளில் சற்று தடுமாறி உள்ளார். எனினும் அவர், தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுவார்.
முதல் போட்டிகள்: தொடக்க நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முக்கிய ஆட்டங்களில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், 98-ம் நிலை வீரரான பிரான்ஸின் பெஞ்சமின் போன்சியுடன் மோதுகிறார். 3-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 80-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஜியோவானி எம்பெட்சி பெரிகார்ட்டுடன் மோதுகிறார்.
13-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், வைல்டு கார்டு வீரரான பிரான்ஸின் ஆர்தர் ஜியாவுடனும், 7-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், வைல்டு கார்டு வீரரான சக நாட்டைச் சேர்ந்த நிஷேஷ் பசவ ரெட்டியுடனும் மோதுகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முக்கியமான ஆட்டங்களில் 8-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, வைல்டு கார்டு வீராங்கனையான பிரான்ஸின் பியோனா ஃபெரோவுடன் மோதுகிறார். 11-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், தகுதி நிலை வீராங்கனையான ஆஸ்திரியாவின் சின்ஜா க்ராஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
பரிசுத் தொகை: பிரெஞ்சு ஓபன் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.550 கோடியாகும். ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.25 கோடி வழங்கப்படும். 2-வது இடத்தை பெறுபவர்கள், ரூ.12.06 கோடியை பரிசாக பெறுவார்கள்.