

புதுடெல்லி: கேரள முதல்வராக பதவியேற்ற பிறகு வி.டி.சதீசன் முதல் முறையாக டெல்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வி.டி.சதீசன் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். அவர் நள்ளிரவில் டெல்லி வந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வி.டி.சதீசன் நேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
கேரள சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மேலிடத் தலைவர்களுக்கு சதீசன் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த சந்திப்பில் கட்சியின் அமைப்பு ரீதியான விஷயங்கள் மற்றும் புதிய கேரள அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சதீசன் வரும் வாரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.