

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி சந்திக்கின்றது. நாக் அவுட் போட்டிகளை இந்திய அணி பிரஷர் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்று கூறிய ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, பெரிய போட்டிகளுக்கான பவுலர் ஜஸ்பிரித் பும்ரா என்று பாராட்டியுள்ளார்.
1999 முதல் 2007 வரை ஐசிசி போட்டிகளில் தொடரை வெல்லும் சாதக அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்த தருணங்களில் நாக் அவுட் போட்டிகளின் அழுத்தம் என்ன என்பதை கிளென் மெக்ரா உணர்ந்தேயிருக்கிறார்.
இந்நிலையில் திங்களன்று எம்.ஆர்.எஃப். வேகப்பந்து வீச்சு அகாடமியில் அவர் பேசும் போது, “மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். எளிமையான விஷயமாக அதைச் சிந்திக்க வேண்டும். நாங்கள் ஆடும்போது அபாயகரமான பகுதி என்பது இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான போட்டிகள்தான். இறுதிக்குள் நுழைந்து விட்டால் கேம் முடிந்து விட்டது என்றே கருதுவோம்.
அழுத்தத்தை எடுத்துக் கொள்ளும் அணி, சவால்களை எதிர்கொள்ள விரும்பும் அணி நாக் அவுட் போட்டிகளுக்குத் தயாராகவே இருப்பார்கள். இறுதிப் போட்டிதான் விஷயமே. உலகத்துலேயே டாப் அணிகள், டாப் வீரர்கள் எல்லாம் இறுதிப் போட்டியில் தங்கள் ஆட்டத்திற்குக் கூடுதல் மெருகேற்றுவார்கள்.
உலகக்கோப்பை என்றால் பைனலுக்குள் நுழைவதெல்லாம் ஒரு புரோசஸ், ஆனால் பைனலில் வெல்வது தான் இலக்கு. பைனலுக்கு முந்தைய போட்டிகள் எல்லாம் அந்த இடத்திற்கு உயரும் படிக்கட்டுகள்தான். அந்த இறுதிப் போட்டின்னு வந்த பிறகு முழு கவனமும் அதை வெல்வதில்தான் இருக்கும்.
அழுத்தத்தையே மகிழ்ச்சியுடன் தனதாக்கிக் கொள்வோம். அப்போது லெவல் இன்னும் உயர்வடையும். ஆஸ்திரேலிய அணி கடும் பிரஷரில் நன்றாக ஆடும் அணி. அதனால் தான் நான் சில வேளைகளில் சில தொடர்களுக்கு முன்னால் முட்டாள் தனமான கணிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். காரணம் இது ஆஸ்திரேலிய அணியிடத்தில் அழுத்தம் ஏற்படுத்தும். அழுத்தத்தில் நன்றாக விளையாடும் அணி ஆஸ்திரேலியா.
இந்த வகையில் பார்த்தால் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா பெரிய போட்டிகளுக்கான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரைப் போன்ற பெரிய பவுலர்கள் இறுதிப் போட்டிகளில் தங்கள் ஆட்டத்திறனை உயர்த்துவார்கள். பெரிய கணங்களை இவர்கள் விரும்புவார்கள். பெரிய போட்டிகள் என்று வரும்போது பும்ரா மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.” என்றார் மெக்ரா.