

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), ஆதித்யா பிரதாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர். இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரியா கங்காஸ் (60 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் முதல் சுற்று ஆட்டங்களில் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் பதக்கப் பட்டியலில் குத்துச்சண்டை விளையாட்டு மீண்டும் கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா இதுவரை 44 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. எனவே இந்த முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறந்த திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளில் 8 பேருக்கு முதல் சுற்றில் ‘பை’ (நேரடியாக அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு) பெற்றுள்ளனர். இந்த வகையில், ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்ய இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்றால் போதும்.
முன்னாள் உலக சாம்பியனான லோவ்லினா போர்கோஹெய்ன், ஐந்து வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 54 கிலோ எடைப் பிரிவிலிருந்து 51 கிலோ எடை பிரிவுக்கு மாறியுள்ள ராணுவ வீராங்கனை சாக் ஷி சவுத்ரி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர், தேர்வுப் போட்டிகளின் போது உலக சாம்பியன்களான நிகத் ஜரீன், மீனாட்சி ஹூடாவைத் தோற்கடித்திருந்தார். அதைத் தொடர்ந்து செக் கிராண்ட் ஃப்ரீ போட்டியில் தங்கம் வென்று தனது திறமையை மீண்டும் நிரூபித்திருந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற ப்ரீத்தி (54 கிலோ) மற்றும் சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றுத் திரும்பிய அருந்ததி (70 கிலோ) ஆகியோரும் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளை வலுப்படுத்துகின்றனர். குத்துச்சண்டையில் இந்திய ஆடவர் அணி பல புதிய வீரர்களுடன் மாற்றத்துக்கான கட்டத்தில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வீரர்களில் ஆறு பேர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகக் களம் காண்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) மற்றும் சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் மட்டுமே அனுபவம் வாய்ந்தவர்கள்.
புதியவர்களில் ஜதுமணி சிங் (55 கிலோ) கவனத்தை ஈர்க்கக்கூடும். மணிப்பூரைச் சேர்ந்த ஜதுமணி சிங் 50 கிலோ பிரிவில் இருந்து 55 கிலோ எடைப் பிரிவுக்கு மாறியுள்ளார். ஆதித்யா பிரதாப் சிங் (65 கிலோ), கபில் போகரியா (90 கிலோ) ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில், உலகக் கோப்பையில் பல பதக்கங்களை வென்ற சச்சின் சிவாச் (60 கிலோ) பதக்கம் வெல்லக்கூடிய வீரராக திகழ்கிறார்.
இந்திய குத்துச் சண்டை அணிகள்
மகளிர் அணி: சாக் ஷி சவுத்ரி (51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), அருந்ததி சவுத்ரி (70 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ).
ஆடவர் அணி: ஜதுமணி சிங் (55 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), ஆதித்யா பிரதாப் சிங் (65 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ), அங்குஷ் (80 கிலோ), கபில் பொகாரியா (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (+90 கிலோ).
இந்திய ஜூடோ வீரர் நீக்கம்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதை தொடர்ந்து இந்திய ஜூடோ வீரர் அருண் குமார், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
73 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் அருண், கடந்த மாதம் நடைபெற்ற கிங்டாவோ கிராண்ட் பிரீ போட்டியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம் நடத்த சோதனையின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
இதில் அருண் குமார், அனபாலிக் ஸ்டீராய்டு எனும் ஊக்கமருந்தை உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இருந்து அருண் குமார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.