

காலே: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு, இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கடும் சவால்தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளது. இதனால் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நடப்பு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்திருந்தது. அதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 2-0 என வென்றிருந்தது.
அதேவேளையில் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக தென் ஆப்பிரிக்காவிடம் இழந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள டெஸ்ட் தொடர்களில் வெற்றிகளை குவித்தாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. இலங்கை டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி, நியூஸிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இந்திய அணி, இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்தே தனது வெற்றிப் பயணத்தை தொடங்க வேண்டும். எனினும் இந்திய அணிக்கு அது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் காலே மைதானம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது.
இந்த ஆடுகளத்தில் இலங்கை அணி 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27-ல் வெற்றி கண்டுள்ளது. முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத் ஆகியோருக்கு பின்னர் தற்போது இலங்கை அணியில் நம்பிக்கை அளிக்கக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களாக பிரபாத் ஜெயசூரியா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் திகழ்கின்றனர். இவர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
ஏனெனில் கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க அணியிடமும், அதற்கு முன்னர் நியூஸிலாந்து அணியிடமும் தனது சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இருப்பினும் இந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள இந்திய அணி கவனமுடன் செயல்படக்கூடும்.
கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி, இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றிருந்தது. இதில் காலே மைதான டெஸ்ட் வெற்றியும் அடங்கும்.
தற்போது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களும் நிறைந்து உள்ளனர். எனினும் இவர்கள் சுழற்பந்து வீச்சு வலையில் சிக்காமல் எப்படி மட்டையை சுழற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல் திறனும் இருக்கும்.
பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கும். சாய் சுதர்சன் இல்லாததால் 3-வது இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்கக்கூடும். ஷுப்மன் கில் 4-வது வீரராக களமிறங்குவார். இதைத் தொடர்ந்து சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் களமிறக்கக்கூடும்.
பந்துவீச்சு துறையில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார் இடம் பெறக்கூடும். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜுடன், பிரசித் கிருஷ்ணா அல்லது குர்னூர் பிரார் களமிறங்கக்கூடும். காலே மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தவாறு இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்படுவது அவசியம்.
இலங்கை அணி தனஞ்ஜெயா டி சில்வா தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி கடைசியாக கடந்த ஜூன்-ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரை இலங்கை அணி 0-1 என இழந்திருந்தது. தற்போது மேற்கிந்தியத் தீவுகளை விட வலிமையான இந்திய அணிக்கு எதிராகத் தங்கள் அணி வீரர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார் தனஞ்ஜெயா டி சில்வா.
நேரம்: காலை 10
நேரலை: சோனி ஸ்போர்ட்ஸ்
அணிகள் விவரம்
இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சர்ஃபராஸ் கான், சரண்ஷ் ஜெயின், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், அகிப் நபி.
இலங்கை: தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), லஹிரு உதாரா, நிஷான் மதுஷ்கா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டாரா, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, கேஷர நுவந்தா, மிலன் ரத்னாயகே, அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, விஷ்வ பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.