

சென்னை: விவேகானந்தா கால்பந்து கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழ்நாடு 20 வயதுக்கு உட்பட்டோர் (யு-20) கால்பந்து அணிக்கு நிதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி) தலையிட திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலர் எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அகில இந்திய கால்பந்து சம்மேளனம்(ஏஐஎஃப்எஃப்) சார்பில் மாணவர், மாணவிகள், இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்காக 13, 15, 20 வயதுக்குட்பட்டோர், சீனியர்பிரிவு சந்தோஷ் டிராபி, ராஜ்மாதா ஜீஜாபாய் டிராபிக்கான மகளிர் சீனியர் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது இளம் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக வயது வரம்பு கொண்ட போட்டிகளில் ஒரு வருடம் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டு அதே வயது பிரிவில் பங்கேற்க இயலாது.
தமிழ்நாடு கால்பந்து கழகத்துக்காக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு கடந்த காலங்களில் 20 வயதுக்குட்பட்டோர் விவேகானந்தா கோப்பை போட்டிக்கு தமிழக அணியை அனுப்புவதில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. போட்டிக்கு செல்ல நிதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் வீரர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அணியை போட்டிக்கு அனுப்பி வைத்தோம். அந்த அணியில் விளையாடிய வீரர்கள் பின்னர் தேசிய அளவிலான சந்தோஷ் டிராபி போட்டியில் விளையாடினர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அணி சென்று வருதல் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்பட்ட தொகை இன்று வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால்(எஸ்டிஏடி), எங்களுக்கு திருப்ப வழங்கப்படவில்லை.
இதே நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது. 20 வயதுக்குட்பட்ட வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணி ஐஎஸ்எல், தேசிய லீக் போன்ற போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு இத்தகைய தேசிய போட்டிகள் முக்கிய வாயிலாக உள்ளன. இந்த வாய்ப்பை மறுப்பது, வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்நாடு கால்பந்து நிர்வாகக் குழுவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுத்து 20 வயதுக்குட்பட்ட வீரர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.