“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC

“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC
Updated on
2 min read

புதுடெல்லி: எதிர்வரும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் கூட்டு முயற்சியை வெளிப்படுத்தினால் கோப்பைக்காக தேசத்தின் 51 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று முன்னாள் உலக சாம்பியன்களும், இந்திய வீரர்களுமான அசோக் குமார் மற்றும் அஸ்லாம் ஷேர் கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஹாக்கி அணி கடந்த 1975-ல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. மலேசியாவில் நடைபெற்ற அந்த தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி இருந்தது. அதன் பின்னர் இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பையில் பட்டம் வெல்லவில்லை.

“இந்திய அணிக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வெற்றியோ அல்லது தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது தேசத்துக்குதான். உங்களுக்கு இதுவே உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன். 51 ஆண்டு கால காத்திருப்பு என்பது மிகவும் நீண்டது. இப்போது நாம் வெற்றி பதக்கத்தை வென்றாக வேண்டும்” என்று அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

1975 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கான வெற்றி கோலை பதிவு செய்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் மிகுந்த தேசப்பற்றுடன் அந்த தொடரில் பங்கேற்று விளையாடினோம். அதே அணுகுமுறை உடன் நீங்கள் இந்த தொடரை அணுக வேண்டும். நாங்கள் மற்ற அணிகள் உடன் எங்களை ஒப்பிட்டு தாழ்த்தி கொண்டது இல்லை.

அந்த நம்பிக்கையை பெற்றால் யாரும் உங்களை தடுக்க முடியாது. கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடியது போலவே இந்தியா விளையாடினால் கோப்பை நமக்கே. ஆட்டத்தின் அடிப்படை நுணுக்கத்தில் கவனம் வைத்தால் போதும். ஹாக்கி ஒரு அணி விளையாட்டு. இதற்கு கூட்டு முயற்சி மிகவும் முக்கியம்” என்று அஸ்லாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971 உலகக் கோப்பையில் வெண்கலம் மற்றும் 1973 உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற இந்திய அணியில் அசோக் மற்றும் அஸ்லாம் ஆகியோர் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி உலகக் கோப்பை - 2026

ஹாக்கி உலகக் கோப்பை தொடர் - 2026 பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. வரும் 14 முதல் 30-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இரண்டு நகரத்தில் அமைந்துள்ள மைதானங்களில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

குரூப் சுற்றான முதல் சுற்று ஆட்டத்தில் நான்கு பிரிவுகளாக 16 அணிகளும், பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் விளையாடுகின்றன. குரூப் சுற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றில் விளையாடும். அதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தொடர்ந்து கிளாசிபிகேஷன் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். வரும் 30-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணி குரூப்-டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. வரும் 15-ம் தேதி வேல்ஸ், 17-ம் தேதி இங்கிலாந்து மற்றும் 19-ம் தேதி பாகிஸ்தான் உடன் இந்தியா குரூப் சுற்றில் விளையாடுகிறது.

முன்னாள் வீரர்கள் மற்றும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், பட்டம் வென்று 51 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்திய ஹாக்கி அணி முடிவுரை எழுதும் என்று நம்புவோம்.

“51 வருட காத்திருப்பு மிக நீண்டது” - இந்திய அணி பட்டம் வெல்ல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Hockey WC
மெஸ்ஸி ஓய்வு பெறுவது எப்போது? - அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in