

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் பேட்டிங் செய்த போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டது. இதன் பின்னர் அவர், களமிறங்கவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற பயிற்சியிலும் ஷுப்மன் கில் கலந்துகொள்வில்லை.
எனினும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் குவாஹாட்டிக்கு இந்திய அணியினருடன் ஷுப்மன் கில் பயணம் செய்துள்ளார். நேற்று பார்பசாரா மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஷுப்மன் கில் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்நிலையில் ஷுப்மன் கில்லுக்கு இன்று மாலை உடற்தகுதி சோதனை நடைபெற உள்ளது. இதன் பின்னரே அவர், நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வாரா என்பது தெரியவரும்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோடக் கூறியதாவது: ஷுப்மன் கில் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். 2-வது டெஸ்டில் அவர், விளையாடுவாரா என்பது குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) மாலை முடிவு செய்யப்படும். ஏனென்றால் ஷுப்மன் கில் முழுமையாக குணமடைந்தாலும், போட்டியின் போது மீண்டும் சுளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து முடிவை தெரிவிப்பார்கள்.
இதில், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஷுப்மன் கில் மேலும் ஒரு போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பார். அவர் போன்ற ஒரு வீரரையும், கேப்டனையும் எந்த அணியாக இருந்தாலும் மிஸ் செய்யவே செய்யும். ஷுப்மன் கில் விளையாட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அவர், விளையாடவில்லை என்றால், நிச்சயமாக சிறந்த மாற்று வீரரை களமிறக்குவோம். அவர், சதம்கூட அடிக்கலாம். கடந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 2 இன்னிங்ஸிலும் பேட் செய்யாதது குறித்து விவாதிக்கவில்லை.
2-வது இன்னிங்ஸ் முக்கியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் முதல் இன்னிங்ஸில் அவர், சிறந்த பார்ட்னர் ஷிப்புடன் 100 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் சிறந்த நிலையில் இருந்திருப்போம். அது ஒரு சாக்குப் போக்கு அல்ல, ஆனால் அவர், இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. இவ்வாறு சிதான்ஷு கோடக் கூறினார்.
ஷுப்மன் கில் முழுமையாக குணமடைய 10 நாட்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர், குவாஹாட்டி டெஸ்டில் விளையாடினால் நவம்பர் 30-ம் தேதி ராஞ்சியில் தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும்.
ஒரு தலைபட்சமாக விமர்சிக்கக்கூடாது: சிதான்ஷு கோடக் கூறும்போது, “அனைவரும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதே குறை கூறுகின்றனர். ஒருதலைபட்சமாக அவரை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலர் கவுதம் கம்பீர் மீது பழி சுமத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு விமர்சிப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு விமர்சிப்பது மிகவும் மோசமானது.
இந்திய அணி வீரர்கள் விளையாடிய விதம் குறித்து ஏன் யாரும் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படாமல் தலைமைப் பயிற்சியாளரை குறிவைத்தே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆடுகள பராமாரிப்பாளர்கள் மீது பழிசுமத்தக் கூடாது என்பதற்காக கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான அனைத்துப் பழிகளையும் கவுதம் கம்பீர் தன் மீது சுமத்திக் கொண்டார்” என்றார்.