

ஆம்ஸ்டல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நிக்கோலஸ் பான்டுராக் கோல் அடித்தார். இதனால் இங்கிகிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இதில் இருந்து இந்திய அணி மீண்டு வந்து 2-1 என முன்னிலை பெற்று பதிலடி கொடுத்தது. 16-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கும், 24-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங்கும் கோல் அடித்தனர்.
ஆனால் 2-வது பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 38-வது நிமிடத்தில் ஸ்டூவர்ட் ரஷ்மியரும், 42-வது நிமிடத்தில் ஹென்றி கிராஃப்டும் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3-2 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் நிக்கோலஸ் பான்டுராக் மீண்டும் கோல் அடிக்க இந்திய அணி அதிர்ச்சி அடைந்தது.
இதன் பின்னர் கடைசி வரை போராடிய போதிலும் இந்திய அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை (19-ம் தேதி) மோதுகிறது.
இந்த ஆட்டத்தை இந்திய அணி குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.