

கிறிஸ்டியன் புலிசிக், டிகோ கோம்ஸ், மேத்யூ ரையன், ஹக்கான் சல்ஹனோக்லு
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் 'டி' பிரிவில் பங்கேற்கும் அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா
பயிற்சியாளர்: மவுரிசியோ பொச்செட்டினோ
பிஃபா தரவரிசை: 16
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1930-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேற்றம்.
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 11
தகுதி பெற்ற விதம்: உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடு என்பதால் நேரடியாக தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்
கிறிஸ் ரிச்சர்ட்ஸ்: அமெரிக்க அணியின் டிபன்ஸில் தூணாகவும் வழிநடத்தும் கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார் கிறிஸ் ரிச்சர்ட்ஸ். பந்தைக் காலடியில் வைத்து நேர்த்தியாக விளையாடக்கூடிய இவர், எதிரணியினரின் தாக்குதலைத் துணிச்சலாக எதிர்கொண்டு பந்தைப் பறிப்பதில் சற்றும் தயங்காத சென்டர்-பேக் வீரரும் ஆவார்.
கிறிஸ்டியன் புலிசிக்: கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க அணியின் முகமாக விளங்கும் புலிசிக், தனது துல்லியமான டிரிப்ளிங் வாயிலாக பந்தை மிக நெருக்கமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் கொண்டவர். மேலும் துல்லியமான ஃபினிஷிங் மூலம் எதிரணியின் தற்காப்புப் பிரிவை நிலைகுலையச் செய்யக்கூடியவர்.
வெஸ்டன் மெக்கன்னி: மைதானத்தின் எந்தவொரு பகுதியிலும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய மிட்ஃபீல்டரான வெஸ்டன் மெக்கன்னி,கிளப் அணிகளிலும் சர்வதேச அளவிலும் பல பயிற்சியாளர்களின் கீழ் தவிர்க்க முடியாத முக்கிய வீரராக மாறியுள்ளார்.
டைலர் ஆடம்ஸ்: 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அமெரிக்க அணியை வழிநடத்திய டைலர் ஆடம்ஸ் மிட்ஃபீல்டின் மையப்பகுதியில் எதிரணியிடமிருந்து பந்தை விடாப்பிடியாகப் பறிப்பதில் சிறப்பாக செயல்படக்கூடியவர். இவர், தற்காப்பிலிருந்து தாக்குதல் ஆட்டத்துக்கு வேகமாக மாறுவதற்கு அணிக்கு பெரிதும் உதவுகிறார்.
ஃபோலரின் பலோகன்: 24 வயதான ஃபோலரின் பலோகன், ஃபார்முக்கு வந்துவிட்டால் தொடர்ந்து கோல் அடிக்கக்கூடிய சிறந்த ஸ்ட்ரைக்கர் ஆவார். இவரது அசாத்திய வேகமும், ஆட்டத்தை முன்கூட்டியே கணிக்கும் திறனும் தனக்கான சிறந்த கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு இவருக்குப் பெரிதும் உதவுகின்றன.
ஆண்டனி ராபின்சன்: புல்ஹாம் அணிக்காக விளையாடி சமீபத்திய ஆண்டுகளில் பிரீமியர் லீக்கின் மிகச்சிறந்த இடது-பேக் வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் ஆண்டனி ராபின்சன். தற்காப்பு ஆட்டத்திலும், மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்று தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 37 ஆட்டங்கள், 9 வெற்றி, 8 டிரா, 20 தோல்வி, 40 அடித்த கோல்கள், 66 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 12 vs பராகுவே
ஜூன் 19 vs ஆஸ்திரேலியா
ஜூன் 25 vs துருக்கி
பராகுவே
பயிற்சியாளர்: குஸ்டாவோ அல்ஃபாரோ
பிஃபா தரவரிசை: 40
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2010-ம் ஆண்டு தொடரில் கால் இறுதி வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர்.
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 8
தகுதி பெற்ற விதம்: தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் பராகுவே 6-வது இடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்தது.
நட்சத்திரங்கள்
டிகோ கோம்ஸ்: 23 வயதான டிகோ கோம்ஸ் எம்.எல்.எஸ் தொடரிலிருந்து பிரீமியர் லீக் தொடருக்கு முன்னேறியுள்ளார். பிரைட்டன் & ஹோவ் அணியில் விளையாடும் அவர், தனது முதல் சீசனிலேயே, முக்கியமான மிட்ஃபீல்டர் வீரராக மாறியுள்ளார்.
மிகுவல் அல்மிரோன்: எம்.எல்.எஸ் மற்றும் பிரீமியர் லீக் ஆகிய இரண்டு தொடர்களின் ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சயமான 32 வயதான விங்கரான மிகுவல் அல்மிரோன், குரூப் சுற்றில் அமெரிக்க அணிக்கு நிச்சயம் பெரும் சவாலாக விளங்குவார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 27 ஆட்டங்கள், 7 வெற்றி, 10 டிரா, 10 தோல்வி, 30 அடித்த கோல்கள், 38 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 12 vs அமெரிக்கா
ஜூன் 19 vs துருக்கி
ஜூன் 25 vs ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா
பயிற்சியாளர்: டோனி போபோவிக்
பிஃபா தரவரிசை: 27
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2006, 2022-ம் ஆண்டு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022-ம் ஆண்டு, கத்தார்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 6
தகுதி பெற்ற விதம்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றின் இறுதிக்கட்டத்தில் கடைசி போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தி தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்
மேத்யூ ரையன்: நீண்டகாலமாக அணியை வழிநடத்தி வரும் கேப்டனான மேத்யூ ரையன், 2026 உலகக் கோப்பைத் தொடரிலும் அணியின் முதன்மை கோல்கீப்பராக தொடர்ந்து நீடிக்கிறார்.
ஜாக்சன் இர்வின்: ஆஸ்திரேலிய அணியின் மிட்ஃபீல்ட் பிரிவில் ஜாக்சன் இர்வின் மிக முக்கிய அங்கமாக திகழக்கூடும்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 20 ஆட்டங்கள், 4 வெற்றி, 4 டிரா, 12 தோல்வி, 17 அடித்த கோல்கள், 37 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs துருக்கி
ஜூன் 19 vs அமெரிக்கா
ஜூன் 25 vs பராகுவே
துருக்கி
பயிற்சியாளர்: வின்சென்சோ மொன்டெல்லா
பிஃபா தரவரிசை: 22
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 3-வது இடம்.
கடைசி உலகக் கோப்பை: 2002
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 2
தகுதி பெற்ற விதம்: பிளே ஆஃப் சுற்றில் ருமேனியா, கொசாவோ அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்
ஹக்கான் சல்ஹனோக்லு: அணியின் கேப்டனும், மிட்ஃபீல்டின் மையத்தூணுமான ஹக்கான் சல்ஹனோக்லு, தனது துல்லியமான மற்றும் பலதரப்பட்ட பாசிங் திறமையால் ஆட்டத்தின் போக்கையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடியவர். தூரத்திலிருந்தே இலக்கை நோக்கித் துல்லியமாக பந்தை அடிக்கும் திறன் மூலம் போட்டியை வென்று கொடுக்கக்கூடியவர்.
கெனன் யில்டிஸ்: 21 வயதான விங்கரான கெனன் யில்டிஸ், இத்தாலியின் மிக வரலாற்றுச் சிறப்புமிக்க கிளப்களில் ஒன்றான ஜூவென்டஸ் அணியின் புகழ்பெற்ற 10-ம் எண் ஜெர்சியை அணிந்து, அந்த அணியின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். யில்டிஸ் ஆடுகளத்தின் விங் பகுதியிலிருந்தோ அல்லது மையப்பகுதியிலிருந்தோ மிகச்சிறப்பாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடியவர்.
அர்தா குலர்: இடது கால் ஆட்டக்காரரான அர்தா குலர் அசாத்தியமான கால்பந்து நுட்பத்தையும், ஆட்டத்தை முன்கூட்டியே கணிக்கும் சிறந்த திறனையும் கொண்டவர். இது அவர், தனது சக வீரர்களுக்குப் பந்தைக் கடத்தி கோல் அடிக்க உதவவும் அல்லது அவரே நேரடியாகக் கோல் அடிக்கவும் வழிவகை செய்கிறது.
ஒட்டுமொத்த செயல் திறன்: 10 ஆட்டங்கள், 5 வெற்றி, 1 டிரா, 4 தோல்வி, 20 அடித்த கோல்கள், 17 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs ஆஸ்திரேலியா
ஜூன் 19 vs பராகுவே
ஜூன் 25 vs அமெரிக்கா