

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் நேற்று 'பி' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
74-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியில் பதிலி வீரராக களமிறங்கிய 20 வயதாகும் ஜோஹான் மன்சம்பி கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 80-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோவை முரட்டுத்தனமாக தடுத்த போஸ்னியா டிஃபென்டர் தாரிக் முஹாரெமோவிக் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் போஸ்னியா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
84-வது நிமிடத்தில் எதிரணி 10 வீரர்களுடன் ஆடியதை சாதகமாக்கிக் கொண்ட சுவிட்சர்லாந்து அணியின் மற்றொரு பதிலி வீரர் ரூபன் வர்காஸ், எம்போலோ கொடுத்த பாஸை மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார். இதனால் சுவிட்சர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது.
90-வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் கொடுத்த பாஸை பயன்படுத்தி ஜோஹான் மன்சம்பி கோல் அடித்தார். இதையடுத்து சுவிட்சர்லாந்து 3-0 என வலுவான முன்னிலையை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சுவிட்சர்லாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+3-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் எர்மின் மஹ்மிக் ஆட்டத்தின் ஆறுதல் கோலை அடித்தார்.
90+7-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் போஸ்னியா வீரர் மெமிக், சுவிட்சர்லாந்து வீரர் சோவ்வை பஃவுல் செய்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை அந்த அணியின் கேப்டன் கிரானிட் ஷாகா எளிதாக கோலாக மாற்ற சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி ‘பி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது. வரும் 24-ம் தேதி நடைபெறும் தங்களது கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி கனடாவை எதிர்கொள்கிறது.