

ஹூஸ்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ‘கே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - காங்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்தார்.
தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 45+5-வது நிமிடத்தில் காங்கோவின் யோவான் விஸ்ஸா தலையால் முட்டி கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் போர்ச்சுகல் அணியினால் மேற்கொண்டு கோல் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது.
இந்தப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் அணியின் 40 வயதான நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலும் அடிக்கவில்லை, கோல் அடிக்க உதவியும் செய்யவில்லை. 68, 73-வது நிமிடங்களில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார். இது தற்போது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
போட்டிக்கு பிறகு தொலைக்காட்சி ஒன்றில் போர்ச்சுகலின் ஆட்டத்தைப் திறனாய்வு செய்த பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரரான தியரி ஹென்றி கூறும்போது, “ஒரு விஷயம் மிகவும் முக்கியம். அணி கோல் அடிக்க வேண்டும், நீங்கள் (கிறிஸ்டியானோ ரொனால்டோ) மட்டுமே கோல் அடிக்க வேண்டியதில்லை.
போர்ச்சுகல் அணியிடம் பந்து வரும்போது கான்சிலோ பந்தைப் பெறுகிறார். அப்போது ரொனால்டோ பலமுறை அந்த இடத்தில் இருக்கிறார். அருகில் இருக்கும் அவர், சிறிது தூரம் ஓடினால், காங்கோவின் டிஃபெண்டர்கள் 6 அடி பாக்ஸ் பகுதிக்குள் சிதற வாய்ப்பிருக்கிறது. ஆனால் ரொனால்டோ தான் கோல் அடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலே ப்ரூனோ ஃபெர்னான்டஸ் பாதையில் செல்கிறார்.
பெனால்டி பாக்ஸுக்குள் செல்லும் ரொனால்டோ தனக்கு பின்புறம் உள்ள ஃபெர்னான்டஸுக்கு பந்தை பாஸ் செய்தால் போதுமானதாக இருக்கும். எளிதாக கோல் அடித்திருக்கலாம்” என்றார்.
காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாகவே 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டார். இலக்கை நோக்கி அவர் அடித்த 3 ஷாட்டுகளும் துல்லியமானதாக இல்லை. மேலும் எதிரணி வீரருடனான நேருக்கு நேர் மோதலில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர், பந்தை தட்டிப்பறித்தார்.
இதன் மூலம் காங்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் அவரை எவ்வளவு திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. உலகக் கோப்பைப் போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்க பட்டியலில் களம் இறங்கிய ஆட்டங்களிலேயே, மிகக் குறைந்த அளவில் அவர், பந்தைக் கையாண்ட 2-வது போட்டி இதுவாகும்.
இது போர்ச்சுக்கல் அணியின் தாக்குதல் ஆட்டத்தில் அவரது பங்களிப்பு எவ்வளவு குறைவாக இருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஏமாற்றம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தற்போதைய ஃபார்ம் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
உலகளாவிய அரங்கில் அவரது அனுபவமும் பெருமையும் இருந்தபோதிலும், பெரிய சர்வதேசத் தொடர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து 10 போட்டிகளாக ஒரு கோல் கூட அடிக்காமல் தவித்து வருகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.