

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியின் தற்காப்பு அரண் அசைக்க முடியாத கோட்டையாக மாறி உள்ளது. ஏனெனில் இதுவரை ஒரு கோல் கூட வாங்காமல் ஸ்பெயின் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக, தொடர்ந்து 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் உலக சாதனை படைத்துள்ளது ஸ்பெயின் அணி.
இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் தொடர்ந்து அதிக போட்டிகளில் கோல் வாங்காத சாதனையை இத்தாலி (1990-ம் ஆண்டு), சுவிட்சர்லாந்து (2006, 2010) ஆகிய அணிகள் தங்கள் வசம் வைத்திருந்தன. இந்த இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் கோல் வாங்காமல் இருந்தன. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது ஸ்பெயின் அணி.
மேலும் அந்த அணியின் கோல்கீப்பர் உனாய் சிமோன், உலகக் கோப்பையில் எதிரணிகளை கோல் அடிக்க விடாமல் தடுத்து தனது சாதனையை 609 நிமிடங்களாக நீட்டித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயின் அணியின் இந்த இரும்புக்கோட்டை போன்ற தற்காப்புப் பயணம் கடந்த 2022-ம் உலகக் கோப்பையின் நாக்-அவுட் போட்டியிலிருந்து தொடங்கியது. அப்போது மொராக்கோ அணிக்கு எதிராக 120 நிமிடங்கள் போராடியும் ஸ்பெயின் ஒரு கோல் கூட வாங்கவில்லை. ஆனால், பெனால்டி ஷூட்-அவுட்டில் மொராக்கோவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறி இருந்தது.