

குவாடலஜாரா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செக் குடியரசு - தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
59-வது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் விளாடிமிர் கோஃபல பெனால்டி பாக்ஸ் பகுதிக்குள் நீண்ட த்ரோவை வழங்க அங்கு எதிரணியால் மார்க் செய்யப்படாமல் இருந்த கேப்டன் லாடிஸ்லாவ் க்ரேஜ்ஸி துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். இதனால் செக் குடியரசு அணி 1-0 என முன்னிலைபெற்றது.
67-வது நிமிடத்தில் தென் கொரியா அணி பதிலடி கொடுத்தது. 2 செக் குடியரசு வீரர்களை ஏமாற்றும் வகையில் போலியான ஷாட் மேற்கொள்வது போன்று பாசாங்கு செய்து சாமர்த்தியமான நகர்வுடன் கோல் அடித்து அசத்தினார் வாங் இன் போம். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
இதைத் தொடர்ந்து 80-வது நிமிடத்தில் வாங் இன் போம் வலது பக்கவாட்டில் இருந்து பாக்ஸின் நடுப்பகுதிக்கு கொடுத்த துல்லியமான கிராஸை தரையில் சறுக்கியவாறு வந்தபடி ஓ ஹியான்-கியூ கோல் அடிக்க செக் குடியரசு அணியின் டிபன்டர்களும், கோல் கீப்பரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுவே தென் கொரியா அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.