

மெக்சிகோ சிட்டி: 23-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று நள்ளிரவு மெக்சிகோவில் கோலாகலமாக தொடங்கியது. மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
9-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா தங்களுக்குத் தாங்களே பெரும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டது. கோல் கீப்பர் ரான்வென் வில்லியம்ஸிடம் பந்து செல்ல அவர், அதை ஸ்பெபெலோ சித்தோலுக்கு பாஸ் செய்தார். ஆனால் சித்தோல் பந்தை சரியாகக் கட்டுப்படுத்தத் தவறியதால் மெக்சிகோ வீரர் எரிக்லிரா பந்தைப் தட்டிப் பறித்தார்.
பின்னர் எரிக் லிரா தட்டிவிட்ட பந்தை பெற்ற ஜூலியன் குயினோன்ஸ், கோல்கீப்பரின் கால்களுக்கு இடையே புகுத்தி வலைக்குள் தள்ளினார். இதனால் மெக்சிகோ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இந்த கோல் காரணமாக முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது. 67-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ரோபர்ட்டோ ஆல்வராடோ கொடுத்த அருமையான கிராஸை பெற்ற ரவுல் ஜிமெனெஸ் தனது அசாத்திய திறமையால் தலையால் முட்டி கோல் அடித்தார்.
இதனால் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடிய போதிலும் தென் ஆப்பிரிக்க அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெற்றது. மெக்சிகோ அணி தனது அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவுடன் 19-ம் தேதி மோதுகிறது. அதே நாளில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, செக் குடியரசு அணியை எதிர்கொள்கிறது.
46-வது கோல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோவின் ரவுல் ஜிமெனெஸ் கோல் அடித்தார். சர்வதேச போட்டிகளில் அவர், அடித்த 46-வது கோலாக இது அமைந்தது. இதன் வாயிலாக மெக்சிகோ அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தை ஜாரெட் போர்கெட்டியுடன் ரவுல் ஜிமெனெஸ் பகிர்ந்து கொண்டார். இந்த பட்டியலில் 52 கோல்களை அடித்து ஜேவியர் சிச்சாரிட்டோ ஹெர்னாண்டஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இன்றைய ஆட்டங்கள்
கத்தார் - சுவிட்சர்லாந்து , நேரம்: அதிகாலை 12:30
பிரேசில் - மொராக்கோ , அதிகாலை: 3:30
ஹைதி - ஸ்காட்லாந்து, நேரம்: காலை 6:30
ஆஸ்திரேலியா - துருக்கி, நேரம்: காலை 9:30
ஜெர்மனி - குராசாவோ, நேரம்: காலை 10:30