

நியூயார்க்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், மொராக்கோ அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இந்த லீக் ஆட்டம் நியூ ஜெர்ஸியிலுள்ள மெட்லைப் மைதானத்தில நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. மொராக்கோ அணியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவருமே, வெளிநாடுகளில் பிறந்து பின்னர் மொராக்கோவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மொராக்கோ வீரர்களின் ஆட்டம் அமைந்திருந்தது. அதற்கேற்றார் போலவே ஆட்டத்தின் முதல் கோலை மொராக்கோ வீரர்கள்தான் அடித்தனர்.
மொராக்கோவின் முதல் கோலை இஸ்மாயில் சைபாரி ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அடித்தார். இதனால் மொராக்கோ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் கோலை அடித்த நடுகள வீரரான இஸ்மாயில் சைபாரி, ஸ்பெயினின் டெர்ராசாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரேசில் வீரர்கள் சுதாரித்து விளையாடத் தொடங்கினர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அபாரமாக செயல்பட்டு ஒரு கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கோலடிக்க பிரேசில் வீரர்கள் தீவிர முயற்சியில் இறங்கினர். முதல் பாதி முடிந்த நிலையில் 1-1 என்ற நிலை நீடித்தது. 2-வது பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க தீவிர செய்தனர்.
ஆனால் அவர்களது எந்த முயற்சிக்கும் பயன் கிடைக்கவில்லை. கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கப்படாததால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது.
80 ஆயிரம் பேர்
இந்தப் போட்டியைக் காண மெட்லைப் மைதானத்தில் 80,663 ரசிகர்கள் கூடியிருந்தனர். மொராக்கோ அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டு விளையாட உள்ளது. அதே நேரத்தில் பிரேசில் அணி, ஹைதியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நெய்மர் காயம்
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இருந்தபோதும் பிரேசில், மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியை ஓய்வறையில் இருந்தபடி அவர் ரசித்தார்.
88 ஆண்டுகள்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கடந்த 88 ஆண்டுகளாக தோல்வியே காணாத அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது. 1930, 1934-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வி கண்டது.
அதன் பின்னர் 1938-ல் நடைபெற்ற உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் போலந்து அணியை, பிரேசில் 6-5 என்ற கணக்கில் வென்றது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் அணி முதல் ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா செய்து வருகிறது. நேற்றைய ஆட்டத்திலும் மொராக்கோவுடன் பிரேசில் டிரா செய்தது. இதன்மூலம் கடந்த 88 ஆண்டுகளாக முதல் ஆட்டத்தில் தோல்வியே காணாத அணி என்ற பெருமையை பிரேசில் அணி பெற்றுள்ளது.