

மெக்சிகோ சிட்டி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே மெக்சிகோ அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். முதல் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றை உறுதி செய்திருந்த மெக்சிகோ அணியினர், கடைசி லீக் ஆட்டத்திலும் தங்களது திறமையை நிரூபித்தனர்.
அதேநேரத்தில் மெக்சிகோ அணியினருக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் செக் குடியரசு வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். முதல் பாதி வரை கோல்கள் விழாததால் 0-0 என்ற நிலை நீடித்தது. ஆனால் 2-வது பாதியில் மெக்சிகோ வீரர் மேட்டியோ சாவேஸ் கோலடித்தார். 55- வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கடத்தித் தந்த பந்தை அருமையான கோலாக மாற்றினார் மேட்டியோ சாவேஸ். இதனால் 1-0 என்ற கணக்கில் மெக்சிகோ முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த 7-வது நிமிடத்திலேயே மற்றொரு கோலடித்தது மெக்சிகோ.
61-வது நிமிடத்தில் ஜார்ஜ் சாஞ்செஸ் பாஸ் செய்த பந்தை, அபாரமான உதையால் கோலாக மாற்றினார் ஜூலியின் குயின்னோஸ். இதனால் மெக்சிகோ 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 90 நிமிடங்களின் முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது மெக்சிகோ.
இதைத் தொடர்ந்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 4-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார் மெக்சிகோ வீரர் அல்வாரோ பிடல்கோ. இதனால் 3-0 என்ற கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று மெக்சிகோ நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.