

கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற கத்தார்-கனடா ஃபிபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டியில் கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் கனடா பந்தாடியது. கனடா வீரர் ஜொனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல்கள் அடித்துச் சாதனை புரிந்தார். கனடா பிரதமர் மார்க் கார்னி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
ஜொனாதன் டேவிட் 29, ஹாஃப் டைம் கூடுதல் நேரமான 48வது நிமிடம் பிறகு 90 நிமிடம் கழிந்து ஸ்டாப்பேஜ் டைமான 92வது நிமிடத்தில் கோல்களை அடித்து இந்த உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் மூன்று கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர், லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்தார்.
தங்களது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஒரு கோல் அடித்து போட்டியை அதிர்ச்சிகரமாக 1-1 என்று டிரா செய்திருந்த கத்தார் அண் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இது கனடா அணியின் முதல் உலகக்கோப்பை வெற்றியோடு 6 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. 1934-ல் இத்தாலி, 1950-ல் பிரேசில் 1978-ல் அர்ஜெண்டினா அணிகள்தான் இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடுகளில் இத்தகைய 6 கோல் வித்தியாச வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் கனடா அடித்த கோல்களே மொத்தம் மூன்றுதான், இந்நிலையில் இந்த 6 கோல்கள் மொத்த சாதனையையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்த இந்தப் போட்டிக்குப் பிறகு, பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ், மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது கையின் ஆறு விரல்களை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “இந்த நாளை யாரும் மறக்க மாட்டார்கள்; எந்த கனடியரும் இந்த நாளை மறக்க மாட்டார்கள்.
இந்த நாட்டில் திறமை இருக்கிறது, மனவலிமை இருக்கிறது, வெற்றி பெறும் ஆர்வம் இருக்கிறது, இந்த நாட்டை சிறப்பாக்கும் பல அம்சங்கள் இருக்கின்றன என்பதை இந்த தருணம் உலகிற்கு உணர்த்துகிறது,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்
கனடா அணிக்கு இந்த மாபெரும் வெற்றியின் முரண் நகையாக சோகமும் நிகழ்ந்தது. இரண்டாவது பாதியில் நடுகள வீரர் இஸ்மாயில் கோனீ கடுமையான காயத்தால் காலில் முறிவு ஏற்பட்டது. கத்தார் வீரர் அசிம் மதிபோ செய்த கடுமையான இடையூறுக்குப் பிறகு கோனீ பல நிமிடங்கள் சிகிச்சை பெற்றார்.
பின்னர் ஸ்ட்ரெச்சரில் வெளியேற்றப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் கோனீவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆபத்தான இடையூறினால் மதிபோ சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். ஏற்கெனவே முதல் பாதியில் ஹொமாம் அகமது சிவப்பு அட்டை பெற்றிருந்ததால், கத்தார் அணி ஒன்பது வீரர்களுடன் போட்டியை முடித்தது.
இந்த வெற்றியின் மூலம் கனடா நான்கு புள்ளிகளுடன் கோல் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்து அணியை முந்தி முன்னேறியது. இதனால் வான்கூவரில் நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்துக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டிக்கு முன்பே கனடாவின் நாக் அவுட் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது.
ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் கைல் லாரின் கனடாவுக்காக கணக்கை தொடங்கினார். ஜொனாதன் டேவிட் அடித்த ‘வாலி’யை கத்தார் கோல் கீப்பர் மஹ்மூத் அபுனதா தடுத்தாலும், திரும்பிய பந்தை லாரின் வலையில் தள்ளினார்.
29-வது நிமிடத்தில் டேவிட் வலது காலால் அற்புதமான வாலி கோல் அடித்து கணக்கை 2-0 ஆக உயர்த்தினார். அதன் பின்னர் 33-வது நிமிடத்தில் ஹோமாம் அகமது வெளியேற்றப்பட்டதால் கத்தார் மேலும் சிக்கலில் சிக்கியது. நடுவர் முதலில் பெனால்டி வழங்கியிருந்தாலும், வீடியோ மறுஆய்வுக்குப் பிறகு பெனால்டி ரத்து செய்யப்பட்டு, பெனால்டி பகுதியின் வெளியே கனடாவுக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. அகமதுக்கு காட்டப்பட்ட மஞ்சள் அட்டை சிவப்பு அட்டையாக மாற்றப்பட்டது.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் குறுக்குக் கம்பத்தில் பட்டு திரும்பிய பந்தை டேவிட் கோலாக மாற்றி கனடாவை 3-0 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார். கோனீவுக்கு பதிலாக களமிறங்கிய நேதன் சலிபா 64-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக்கில் கோல் அடித்து கணக்கை 4-0 ஆக்கினார்.
75-வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகம்து மனாய் தன்னுடைய கோல் வலையிலேயே பந்தை திருப்பியதால் கனடாவின் முன்னிலை 5-0 ஆக அதிகரித்தது. கூடுதல் நேரத்தில் ஜொனாதன் டேவிட் தனது ஹாட்ரிக்கை நிறைவு செய்து கனடாவின் 6-0 என்ற வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.