

டல்லாஸ்: பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஏடி&டி மைதானத்தில் ‘எல்' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.
போட்டியின் 12-வது நிமிடத்தில் பெனால்டி பகுதியில் இங்கிலாந்து அணியின் நோனி மடுயேகேவை குரோஷியாவின் லூகா மோட்ரிச் ஃபவுல் செய்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. கேப்டன் ஹாரி கேன் அடித்த பெனால்டி கிக்கை குரோஷிய கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக் இடது பக்கமாக பாய்ந்து தடுத்தார். ஆனால் அவர், கோல் லைனை விட்டு சற்று முன்னே வந்திருந்தார்.
அதேவேளையில் குரோஷியா வீரர் குவார்டியோல் முன்கூட்டியே பெனால்டி பகுதிக்குள் நுழைந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை ஹாரி கேன் சரியாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
36-வது நிமிடத்தில் குரோஷியா அணி பதிலடி கொடுத்தது. குரோஷியா அணியின் பீட்டர் சுசிக் பந்தை விரைவாக கடத்திச் சென்று இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டோன்ஸுக்கு போக்கு காட்டி மார்ட்டின் பாடுரினாவுக்கு தட்டிவிட்டார். அவர், அதை பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து வலுவாக உதைக்க இரு டிஃபெண்டர்களுக்கு ஊடாக சென்று கோல் கீப்பரின் தடுப்பு அரணை மீறி கோலாக மாறியது.
42-வது நிமிடத்தில் டெக்லான் ரைஸின் கார்னர் கிக்கை ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடிக்க இங்கிலாந்து அணி 2-1என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் 45+5-வது நிமிடத்தில் குரோஷியா அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
பாசாலிச் பந்தை மேலே தூக்கி அடிக்க, பெரிசிச் அதைத் தலையால் முட்டி மூசாவின் வழிக்குத் திருப்பிவிட்டார். அவர், அதை லாவகமாக கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி தொடங்கிய 47-வது நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம் வலது பக்கவாட்டில் இருந்து பந்தை விரைவாக கடத்திச் சென்று கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3-2 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இங்கிலாந்து அணியின் கோல் அடிக்கும் துல்லியமான 5 வாய்ப்புகளை குரோஷியாவின் கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக் அற்புதமாக தடுத்தார்.
ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பதிலி வீரராக களமிறங்கிய புகாயோ சாகா மற்றும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் கூட்டணி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தது. சாகா கொடுத்த நேர்த்தியான பாஸை ராஷ்ஃபோர்ட் 85-வது நிமிடத்தில் கோலாக மாற்ற இங்கிலாந்து அணி 4-2 என முன்னிலை பெற்றது. குரோஷியா அணியால் போராடிய போதிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ‘எல்’ பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது- இங்கிலாந்து அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி கானாவுடன் மோதுகிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, பனாமா அணியை எதிர்கொள்கிறது.