கானாவுடன் இங்கிலாந்து டிரா | FIFA WC 2026

கானாவுடன் இங்கிலாந்து டிரா | FIFA WC 2026
Updated on
1 min read

பாஸ்டன்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. பாஸ்டனிலுள்ள ஜிலெட் மைதானத்தில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடி கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது முயற்சி கோலில் முடியவில்லை. பந்தை, இங்கிலாந்து வீரர்கள் அதிக நேரம் தம்வசம் வைத்திருந்தபோதும் அவர்களது கோலடிக்கும் முயற்சிக்கு கானா வீரர்கள் தடையாக இருந்தனர். அவர்களது பாதுகாப்பு அரண்களை உடைக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.

முதல் பாதி வரை 0-0 என்ற நிலையே நீடித்தது. 2-வது பாதி தொடங்கிய பின்னர் இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதி நிமிடங்கள் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு பல முறை கோலடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவற்றை அவர்கள் தவறவிட்டனர். 86-வது நிமிடத்தின்போது இங்கிலாந்து வீரர் நிக்கோ ஓ'ரெய்லி தலையால் முட்டி கோலடிக்க முயன்றார் ஆனால், பந்து குறுக்குக் கம்பத்தில் பட்டு திரும்பிச் சென்றது.

அதேபோல் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தனக்கு வந்த பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றுவிட்டது. கானா அணியின் கோல்கீப்பர் பெஞ்சமின் அசாரே, பந்துகளை சிறப்பாக தடுத்து இங்கிலாந்து அணியின் கோலடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

கானாவுடன் இங்கிலாந்து டிரா | FIFA WC 2026
நாக்-அவுட் சுற்றுக்கு கொலம்பியா முன்னேற்றம்: 1-0 என்ற கணக்கில் காங்கோவை சாய்த்தது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in