

மெக்சிகோ சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று மெக்சிகோ நகரிலுள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி எல்லைக்குள் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை மெக்சிகோவின் ஜிமினெஸால் துரத்திப் பிடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் பந்தை வேகமாக எறிந்து டெக்லான் ரைஸை நோக்கி ஓடவிட்டார். டெக்லான் ரைஸ் உடனடியாக பந்தை புகாயோ சாகாவுக்கு தட்டிவிட்டார். சாகா அடித்த கிராஸ் ஹாரி கேனை கடந்து, பின் பகுதியில் எவராலும் மார்க் செய்யப்படாமல் இருந்த ஜூட் பெல்லிங்ஹாம் வசம் சென்றது. அவர், பந்தைத் தலையால் முட்டி கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
38-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் எலியாட் ஆண்டர்சன் மெக்சிகோவின் மோராவிடமிருந்து பந்தை சாதுரியமாகப் பறித்து பெல்லிங்ஹாமை நோக்கித் தட்டிவிட்டார். அவர், அதை ஹாரி கேனிடம் கடத்த அவர், கோல் கம்பத்துக்கு மிகு அருகிலிருந்தவாறு பந்தை கோல் வலைக்குள் எளிதாகத் தட்டிவிட்டார். இதனால் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
42-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் வீரர் அல்வராடோ ஃப்ரீ-கிக்கில் உதைத்த பந்து இங்கிலாந்து வீரர்களின் மீது பட்டு திசைமாறியது. அப்போது மெக்சிகோவின் ஜூலியன் குயினோன்ஸ் பந்து தரையில் படுவதற்குள் ஒரு அசுரத்தனமான ஷாட் அடித்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார். 54-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜீசஸ் கல்லார்டோவை ஃபவுல் செய்தார் இங்கிலாந்தின் குவான்சா.
இதனால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 60-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் கோல் கீப்பர் ரவுல் ரான்ஜெல் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பந்தை தடுக்க முயன்ற போது இங்கிலாந்தின் அந்தோனி கோர்டானை ஃபவுல் செய்தார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஹாரி கேன் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை பெற்றது. 69-வது
நிமிடத்தில் மெக்சிகோ வீரர் குட்ரெஸை, ஹாரி கேன் ஃபவுல் செய்தார். இதனால் மெக்சிகோ அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை ரவுல் ஜிமென்ஸ் கோலாக மாற்றினார். இதனால் மெக்சிகோ அணி 2-3 என நெருங்கியது.
தாக்குதல் ஆட்டம்
இதன் பின்னர் ஆட்டத்தின் கடைசி 21 நிமிடங்களிலும், காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11 நிமிடங்களிலும் மெக்சிகோ அணி ஆக்ரோஷமாகத் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் மற்றும் இங்கிலாந்தின் தற்காப்பு வீரர்கள் உறுதியாக நின்று மெக்சிகோ அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தது. வரும் 6-ம் தேதி நடைபெறும் கால் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, நார்வேயுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
அடித்தவரும்... கொடுத்தவரும்..
மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திரமான ஹாரி கேன் பெனால்டி கிக்கில் கோல் அடித்தார். அதேவேளையில் மெக்சிகோ வீரர் குட்ரெஸை ஃபவுல் செய்தார். இதன் மூலம் கிடைத்த பெனால்டி கிக்கில் மெக்சிகோ அணி கோல் அடித்தது. இதன் வாயிலாக ஒரே ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் கோல் அடித்து, கோலையும் வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் ஹாரிகேன். உலகக் கோப்பை வரலாற்றில் கடைசியாக இதுபோன்ற நிகழ்வு 1966-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 60 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.
8 முறை தோல்வி
1986-ம் ஆண்டு உலகக் கோப்பையைத் தனது சொந்த நாட்டில் நடத்தியதற்குப் பிறகு, மெக்சிகோ அணியால் உலகக் கோப்பையின் கால்இறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதன்பின்னர், அவர்கள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எட்டு முறை தோற்று வெளியேறியுள்ளனர். 2022-ல் லீக் சுற்றைத் தாண்டத் தவறினர். 1990-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மெக்சிகோ தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தது.
வீழ்ந்த இடத்தில் எழுச்சி
1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் அர்ஜெண்டினா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் டியாகோ மரடோனாவின் புகழ்பெற்ற 'கடவுளின் கை' கோலால் இங்கிலாந்து அணி வீழ்ந்திருந்தது. அதே அஸ்டெகா மைதானத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரி கேனின் ஆட்டம் வரலாற்றுப் பெருமையை மீட்டுள்ளது.