

சியாட்டல்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள லூமன் பீல்டு மைதானத்தில் ‘ஜி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் - எகிப்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் எகிப்து அணி முதல் கோலை அடித்தது.
இடது பக்கத்தில் முகமது சாலாவிடம் இருந்து பந்தை பெற்ற இமாம் அஷூர், பாக்ஸின் வெளியே இருந்து துல்லியமான அடித்த ஷாட் கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் எகிப்து 1-0 என முன்னிலை பெற்றது.
66-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோமெலு லுகாகு பதிலி வீரராக களமிறங்கினார். அப்போது யூரி தியேலெமான்ஸ் கொடுத்த பந்தை வாங்கிய தாமஸ் முனியர் அதை வலது பக்கவாட்டில் கடத்திச் சென்று, எகிப்தின் பாக்ஸிற்குள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த லுகாகுவிடம் தட்டிவிட்டார்.
அப்போது அவரது இருபுறம் இருந்த எகிப்து டிஃபென்டர்களான இப்ராஹிம், முகமது ஹானி இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால் பந்தைத் தடுத்து நிறுத்த முயன்ற ஹானி எதிர்பாராதவிதமாக சுய கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. இதன் பின்னர் கடைசி வரை மேற்கொண்டு இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. சுய கோல் அடிக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை எகிப்து அணி வெற்றி பெற்று பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.