

சியாட்டில்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் மைதானத்தில் பெல்ஜியம் - அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்தது.
பெல்ஜியம் அணியின் வீரர் லுகேபாக்கியோ வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு கொடுத்த தொலைதூர பாஸ் நேராக ட்ரோஸார்டை சென்றடைந்தது. இதன் பின்னர் ட்ரோஸார்ட் அடித்த கிராஸை அமெரிக்க அணியின் வீரர் ஃப்ரீமேன் தடுத்தார். ஆனால் மற்றொரு அமெரிக்க வீரரான ரிச்சர்ட்ஸ் அதை தலையால் முட்டி விலக்கிவிடத் தவறினார்.
இந்தத் தவறை சரியாக பயன்படுத்திய பெல்ஜியம் அணியின் நிக்கோலா ரஸ்கின், துள்ளிக் குதித்த பந்தைக் கட்டுப்படுத்தி, 18 அடி தூர பாக்ஸிற்குள் புகுந்து, கோல் போஸ்ட்டின் முகப்பை நோக்கி பந்தை தாழ்வாக பாஸ் செய்தார். அங்கே ஊடுருவி நுழைந்த சார்லஸ் டி கெட்டேலேரே எளிதாக பந்தை கோல் வலைக்குள் தட்டிவிட்டார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
31-வது நிமிடத்தில் அமெரிக்கா பதிலடி கொடுத்தது. அமெரிக்க வீரர் மாலிக் தில்மேன் ஃபிரீ-கிக்கில் உதைத்த பந்து, பெல்ஜியம் தற்காப்பு அரண் மீது பலமாகப் பட்டு திசைமாறி கோல்கீப்பரை ஏமாற்றி நேராக கோல்வலையை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. ஆனால் அடுத்த இரு நிமிடங்களில் பெல்ஜியம் அணி கோல் அடித்து மிரட்டியது.
33-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் யூரி டீலெமன்ஸ் இடது விங்கில் மார்க்கிங் செய்யப்படாமல் இருந்த ட்ரோஸார்டுக்கு பந்தை பாஸ் செய்தார். அவர், பைலைனுக்கு அருகே இருந்து பந்தை பாக்ஸ் பகுதிக்குள் தூக்கி அடித்தார். அங்கு தயாராக இருந்த சார்லஸ் டி கெட்டேலேரே, அமெரிக்க அணியின் டிஃபென்டர்களுக்கு ஊடாக துள்ளியவாறு தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் பெல்ஜியம் அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
57-வது நிமிடத்தில் மெகலென், பெல்ஜியம் அணியின் தற்காப்புப் பகுதியிலிருந்து பந்தை அமெரிக்கப் பகுதியை நோக்கி உதைத்தார். அப்போது வேகமாக ஓடிவந்த டி கெட்டேலேரேவைத் தடுப்பதற்காக, அமெரிக்கக் கோல் கீப்பர் மேட் ஃபிரீஸ் தனது பகுதியில் இருந்து வெகுதூரம் வெளியே ஓடி வந்தார். பந்தை உதைத்து லாங் கிளியர் செய்ய முயன்ற மேட் ஃபிரீஸ், முதல் முயற்சியிலேயே பந்தைச் சரியாக உதைக்கத் தவறினார்.
இதை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் அணியின் டி கெட்டேலேரே, பந்தை அவரிடமிருந்து தட்டிப் பறித்து தனக்கு முன்னால் இருந்த ஹான்ஸ் வனாகனுக்கு தட்டிவிட்டார். அவர், பந்தை தொலைவில் இருந்து தாழ்வாக அடித்த ஷாட் கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் பெல்ஜியம் அணி 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது.
இதன் பின்னர் பெல்ஜியம் அணி தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டு அமெரிக்க அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்தது. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+3-வது நிமிடத்தில் ஹான்ஸ் வனாகன் உதவியுடன் பந்தை பெற்ற சீனியர் நட்சத்திரமான ரோமலு லுகாகு கோல் அடித்து அசத்தினார். முடிவில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் பெல்ஜியம் அணி, ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.