

சியாட்டில்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 24-வது நிமிடத்தில் செனகல் அணி முதல் கோலை அடித்தது. செனகல் அணியின் நட்சத்திர வீரரான சடியோ மானே தனக்கு முன்னால் இருந்த தடுப்பாட்டக்காரரை நிலைதடுமாறச் செய்து, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி பந்தை வேகமாக கிராஸ் செய்தார்.
அங்கே நின்ற இஸ்மைலா சர்பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து வலது பக்க போஸ்ட்டில் பட்டு திரும்பியது. திரும்பி வந்த பந்தை அருகிலிருந்து ஹபீப் தியாரா மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் வலைக்குள் திணித்தார். இதனால் செனகல் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது.
51-வது நிமிடத்தில் செனகல் வீரர் மூசா நியாகடே அடித்த தொலைதூர பாஸை கணிப்பதில் பெல்ஜியம் அணியின் வீரர் மெச்சேலே கோட்டைவிட, இஸ்மைலா சர் மின்னல் வேகத்தில் அவருக்குப் பின்னால் பாய்ந்து சென்று பந்தை நெஞ்சால் அழகாகக் கட்டுப்படுத்தி பெனால்டி ஏரியாவிற்குள் கொண்டு சென்றார். அங்கு அவர், நிலைதடுமாறிய போதிலும் தனது வலுவான ஷாட்டால் பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதனால் செனகல் அணி 2-0 என முன்னிலை பெற்றது. போட்டி முடிவடைய 4 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையிலும் செனகல் அணி வலுவான நிலையில் இருந்தது. ஆனால் 86-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி அடித்த கோல் காரணமாக ஆட்டத்தின் போக்கு மாறியது. வலது பக்கத்தில் இருந்து பெல்ஜியம் அணியின் வீரர் மெயூனியர் தளர்வாக அடித்த பந்தை கோல் கம்பத்துக்கு அருகில் இருந்த ரோமலு லுகாகு லாவகமாக தூக்கி அடிக்க கோல் வலைக்குள் பாய்ந்தது.
தொடர்ந்து 89-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் லியாண்ட்ரோ டிரொஸார்ட் இலக்கை நோக்கி தூக்கி அடித்த கிராஸை கோல் கம்பத்துக்கு அருகில் நின்ற யூரி திலெமன்ஸ் துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இந்த கோலால் செனகல் அணி அதிர்ச்சியில் உறைந்தது.
90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 7 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 119-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ் பகுதிக்குள் யூரி திலெமன்ஸ், செனகல் வீரர் லமின் கமாராவால் ஃபவுல் செய்யப்பட்டார். விஏஆர் சோதனையில் சுமார் 6 நிமிடங்களுக்குப் பிறகு பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி 120+5-வது நிமிடத்தில் யூரி திலெமன்ஸ் எளிதாக கோல் அடிக்க பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் யாரும் எதிர்பராத வகையில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. பெல்ஜியம் அணியின் இந்த சர்ச்சை கோல் காரணமாக செனகல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.
2-வது முறையாக வெற்றி
நடப்பு உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் செனகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஒரு கட்டத்தில் 2 கோல்கள் வாங்கி பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி இதுபோன்று வெற்றி பெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஜப்பானுக்கு எதிராக 0-2 எனப் பின்தங்கியிருந்து, பின்னர் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
கோர்டுவா அசத்தல்
செனகல் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்த போதிலும் அந்த அணி தனது முன்னிலையை அதிகரித்த எடுத்த முயற்சிகளுக்கு பெல்ஜியம் அணியின் கோல் கீப்பரான திபோ கோர்டுவா முட்டுக்கட்டையாக இருந்தது. செனகல் அணியின் கோல் அடிக்கும் 3 அற்புதமான வாய்ப்புகளை திபோ கோர்டுவா தடுத்து அசத்தினார்.