நிராகரிப்பை நம்பிக்கையாக்கிய இங்கிலாந்து அணி நாயகன்... யார் இந்த ஹாரி கேன்?

ஹாரி கேன்

ஹாரி கேன்

Updated on
4 min read

2026 உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு எதிராக இங்கிலாந்து அதிர்ச்சியில் சிக்கியது. 7-வது நிமிடத்திலேயே பின்தங்கிய அந்த அணி, வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் 75-வது நிமிடத்தில் தலையால் சமநிலை கோலும், 86-வது நிமிடத்தில் இடிமுழக்கம் போல வெற்றிக் கோலும் அடித்து போட்டியை மட்டுமல்ல, ஒரு நாட்டின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன்.

அந்த இரண்டு கோல்கள் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது 13-வது கோலை பதிவு செய்து, பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை முந்தியிருக்கிறார். இங்கிலாந்தின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றிருந்த கேன், இன்று உலக கால்பந்தின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

லண்டனில் தொடங்கிய சாதாரண சிறுவனின் கனவு

1993 ஜூலை 28-ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வால்தம்ஸ்டோவில் பாட்ரிக் கேன் மற்றும் கிம் கேனுக்கு மகனாக ஹாரி எட்வர்ட் கேன் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கால்பந்தின் மீது இருந்த ஆர்வத்தை அவரது பெற்றோர் முழுமையாக ஆதரித்தனர்.

பல பெற்றோர்கள் போல ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்து’ என்று சொல்லாமல், தனது மகனின் கனவை நம்பி லண்டன் முழுவதும் வாரத்தில் பல முறை பயிற்சிக்காக அழைத்துச் சென்றனர். அந்தப் பயணங்கள் ஒருநாள் உலகக் கோப்பை மேடைக்கு வழிகாட்டும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. விளையாட்டுடன் படிப்பும் முக்கியம் என்ற ஒழுக்கத்தை வீட்டிலேயே கற்றுக்கொடுத்தனர். அந்த குடும்ப ஆதரவே கேனின் வாழ்க்கையின் முதல் வெற்றியாக அமைந்தது.

சிறுவயதிலேயே கால்பந்து அவருக்கு ஒரு விளையாட்டு அல்லாமல் வாழ்க்கையின் கனவாகவும் மாறிவிட்டது. 2005-ஆம் ஆண்டு டேவிட் பெக்கம் கால்பந்து அகாடமி தொடக்க விழாவில் சிறுவனாக கலந்து கொண்ட ஹாரி கேன், ஒருநாள் இங்கிலாந்துக்காக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கனவை நோக்கி நகர்ந்தார். அந்தக் கனவுதான் பின்னர் அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய இலக்காகவும் மாறியது.

ஹாரி கேன்

ஹாரி கேன்

நிராகரிப்பே முதல் ஆசிரியர்

கேனின் பயணம் எளிதாக அமையவில்லை. எட்டு வயதில் ஆர்சனல் அகாடமியில் இருந்து உடல்தகுதி குறைவு, வேகம் போதவில்லை என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டார். பலருக்கு அதுவே முடிவாக இருந்திருக்கும். ஆனால் கேனுக்கு அது தொடக்க புள்ளியாக அமைந்தது. அந்த நிராகரிப்பை மனதில் சுமையாக அல்லாமல் ஊக்கமாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக்கொள்ள தொடங்கினார். பின்னர் ஆர்சனலுக்கு எதிராக அடித்த ஒவ்வொரு கோலும் அந்த நிராகரிப்புக்கான பதிலாக அமைந்தது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரில் இருந்தாலும், ஆரம்பத்தில் முதல் அணியில் இடம் கிடைக்கவில்லை. லெய்டன் ஓரியன்ட், மில்வால், நார்விச் சிட்டி, லெஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கு கடனில் அனுப்பப்பட்டார். லெய்டன் ஓரியன்டில் மூத்த வீரர்களின் சூழலை கற்றுக்கொண்டார்.

மில்வாலில் உடல் வலிமையும் மன உறுதியும் வளர்ந்தது. அங்கு ‘யங் பிளேயர் ஆஃப் தி இயர்’ விருதையும் வென்றார். நார்விச்சில் காயம், ஏமாற்றங்களை சந்தித்தார். லெஸ்டரில் பெஞ்சில் காத்திருக்க வேண்டிய பொறுமையையும் கற்றார். அந்த நான்கு கடன் காலங்கள்தான் உலகத் தரமான ஸ்டிரைக்கரை உருவாக்கிய மறைக்கப்பட்ட காலங்களாக அமைந்தது.

போச்செட்டினோவின் நம்பிக்கை...

2014-15 காலக்கட்டம் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. பயிற்சியாளர் மொரீசியோ போச்செட்டினோ, விலை உயர்ந்த நட்சத்திரங்களை விட கடினமாக உழைக்கும் கேனை நம்பினார். அந்த நம்பிக்கைக்கு பதிலளித்த கேன், அனைத்து போட்டிகளிலும் 31 கோல்கள் அடித்து பிரீமியர் லீக்கின் புதிய முகமாக உயர்ந்தார். அதன்பிறகு கோல் அடிப்பது அவரது பழக்கமாக மாறியது.

டாட்டன்ஹாமில் பல ஆண்டுகள் விளையாடிய அவர், கிளப்பின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உயர்ந்தார். அணிக்கு பெரிய கோப்பை கிடைக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட சாதனைகள் தொடர்ந்துவந்தன. மூன்று முறை பிரீமியர் லீக் கோல்டன் பூட், 2018 உலகக் கோப்பை கோல்டன் பூட், இங்கிலாந்தின் அதிக கோல்கள் அடித்த வீரர், தேசிய அணியின் நீண்டகால கேப்டன் என அவரது பெயர் சாதனைகளால் நிரம்பியது.

2023-ல் ஜெர்மனியின் பாயர்ன் மியூனிக்கிற்கு மாறியது, அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக அமைந்தது. புதிய நாடு, மொழி, கால்பந்து கலாசாரம் என பல சவால்கள் இருந்தாலும், அவற்றை மிக வேகமாகவும், நேர்த்தியாகவும் வென்றார். முதல் பருவத்திலேயே கோல் மழை பொழிந்து ஐரோப்பியன் கோல்டன் ஷூவை வென்றார். 2025-26 பருவத்தில் கிளப்புக்காக அபார கோல் எண்ணிக்கையை பதிவு செய்து உலகின் மிக ஆபத்தான ஸ்டிரைக்கர் என்ற பெயரை மேலும் உறுதிப்படுத்தினார்.

கேனை வேறுபடுத்திக் காட்டுவது அவரது கோல்கள் மட்டுமல்ல. பெனால்டி பாக்ஸுக்குள் காத்திருக்கும் பாரம்பரிய ஸ்டிரைக்கராக மட்டுமில்லாமல், மிட்ஃபீல்டுக்கு பின்வாங்கி பந்தை பகிர்ந்தளிப்பது, துல்லியமான நீளப் பாஸ்களை வழங்குவது, அடுத்த நொடியே பெனால்டி பாக்ஸுக்குள் நுழைந்து கோல் அடிப்பது போன்றவற்றால் அவரை பல நிபுணர்கள் "9.5" வகை ஸ்டிரைக்கர் என்று அழைக்கிறார்கள்.

ஹாரி கேன்

ஹாரி கேன்

ரோல் மாடலான கேன்

மைதானத்துக்கு வெளியேயும் கேன் ஒரு முன்மாதிரியாகவே செயல்படுகிறார். மனநல விழிப்புணர்வை அதிகரிக்க ஹாரி கேன் பவுண்டேஷன் (Harry Kane Foundation)தொடங்கி, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநல பாதுகாப்பு குறித்து பல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். பள்ளி மாணவர்களுக்கான மன உறுதி கல்வித் திட்டங்கள், மனநல உதவி அமைப்புகளுக்கான நிதி திரட்டல், இளைஞர்களிடையே மனநலத்தைப் பற்றி வெளிப்படையாக பேச ஊக்குவிக்கும் பிரச்சாரங்கள் என சமூகப் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

மனநலத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் இருக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது பவுண்டேஷனின் நோக்கம் என அவர் வலியுறுத்தி வருகிறார். கால்பந்தில் கோல்கள் அடிப்பதைப் போலவே, சமூகத்தில் நல்ல மாற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளில் 100 சதவீதமும் மனநலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. இதுவே அந்த பவுண்டேஷனின் முக்கியக் கொள்கையாகும்.

பள்ளி பருவத்திலிருந்தே அறிமுகமான கேட்டி குட்லாண்டை திருமணம் செய்துகொண்ட கேன், தனது குடும்பமே தனது மிகப் பெரிய பலம் என்று பலமுறை கூறியுள்ளார். கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் குடும்பத்துடன் செலவிடும் நேரமே தனக்கு மனநிம்மதியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் கரெத் சவுத்கேட், “அவர் சத்தமாக பேசுவதில்லை தனது செயலால் அணியை வழிநடத்துகிறார்” என்றும், தற்போதைய பயிற்சியாளர் தாமஸ் டூக்கல், “ஹாரி கேன் ஒரு ரோல் மாடல் அவர் மைதானத்தில் இருப்பதே மற்றவர்களை சிறப்பாக விளையாட வைக்கிறது” என்றும் பாராட்டியுள்ளனர். அமைதியான குணம், கடுமையான ஒழுக்கம், இடைவிடாத உழைப்பு ஆகியவை அவரை சக வீரர்களிடமிருந்து தனித்துவமாக்குகின்றன.

வரும் தலைமுறைக்கு பாடம்

ஹாரி கேனின் வாழ்க்கை ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. உலகின் சிறந்த வீரராக மாறுவதற்கு பிறவித் திறமை மட்டும் போதாது. நிராகரிப்பை தாங்கும் மனவலிமையும், தோல்வியை பாடமாக மாற்றும் குணமும், அனுதினமும் தன்னை மேம்படுத்தும் ஒழுக்கமும் இருந்தால் சாதாரண சிறுவனும் உலக சாதனையாளராக முடியும் என்று நிரூபித்துள்ளார்.

எட்டு வயதில் “உன்னால் முடியாது” என்று கூறி நிராகரிக்கப்பட்ட சிறுவன், இன்று உலகக் கோப்பை மேடையில் ஒரு நாட்டின் நம்பிக்கையை சுமக்கும் கேப்டனாக நிற்கிறார்.

திறமை மட்டுமல்லாமல் விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவையும் ஒருவரை உலகின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்திருக்கிறார் ஹாரி கேன். அதனால்தான் அவர் ஒரு சிறந்த ஸ்டிரைக்கராக மட்டுமல்லாமல் நிராகரிப்பை நம்பிக்கையாக மாற்றிய மனிதராகவும், கனவுகளை விடாமுயற்சியால் வெல்ல முடியும் என்பதற்குமான நிகழ்கால எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்.

ஹாரி கேன்

தவெகவிடம் கூட்டணிக் கட்சிகளை திமுக பறிகொடுத்தது எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in