

சவுத்தாம்ப்டன்: ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப நாங்கள் மாறிக் கொள்ளவில்லை. இதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் தோல்வி கண்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வந்தது.
முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி சவுத்தாம்ப்டனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 6, ஜாஸ் பட்லர் 131, ஹாரி புரூக் 95, ஜேக்கப் பெத்தேல் 0, வில் ஜேக்ஸ் 7 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளிடையிலான முதல் போட்டியின் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
தோல்விக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கூறியதாவது: சூழலுக்கு ஏற்ப நாங்கள் மாறத் தவறியதே பின்னடைவுக்கு காரணம். தோல்வியில் இருந்து நான் பாடம் கற்பேன். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளிடம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி விட்டோம்.
இதுதான் இந்தத் தொடரில் தோல்விக்கு காரணம். ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றதை எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். இந்திய அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். நிச்சயமாக எனக்கு அழுத்தமான ஆட்டங்களில் விளையாடுவது என்றால் பிடிக்கும். இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நாங்கள் அதிகமான கேட்ச்களை தவற விட்டோம். இதுவே எங்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. இவ்வாறு ஸ்ரேயஸ் அய்யர் கூறினார்.
ஆட்டநாயகனாக சதமடித்த ஜாஸ் பட்லரும், தொடர்நாயகனாக ஹாரி புரூக்கும் தேர்வாயினர். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரையும் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடர்
டி20 தொடர் முடிந்துள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டி தொடர் வரும் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. 14-ம் தேதி பர்மிங்ஹாமில் முதல் போட்டியும், 16-ம் தேதி கார்டிஃப்பில் 2-வது போட்டியும், 19-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளன.