

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் கால் இறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நார்வேயை பந்தாடி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்து அசத்தல் சாதனை புரிந்தார். அமெரிக்காவின் மியாமி கார்டன்ஸிலுள்ள மியாமி மைதானத்தில் நேற்று காலை இந்த கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த கால் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்திருந்தது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஷெஜெல்டரப் ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். நார்வே வீரர் எம்.ஒடேகார்ட் அழகாக கடத்தித் தந்த கிராஸைப் பெற்ற ஆண்ட்ரியாஸ் கோல் வலைக்குள் திணித்து தனது அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். நார்வே முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர்.
இதற்கு அடுத்த 11 நிமிடங்களிலேயே நல்ல பலன் கிடைத்தது. 45+2-வது நிமிடத்தில் ஜுட் பெல்லிங்ஹாம் கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலை பெறச் செய்தார். இங்கிலாந்து வீரர் ஏ.கார்டன் கடத்தித் தந்த பந்தை அழகான கோலாக மாற்றினார் ஜூட் பெல்லிங்ஹாம். முதல் பாதி வரை 1-1 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடி கோலடிக்க முயன்றனர். ஆனால் இரு அணி வீரர்களின் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. 2-வது பாதியிலும் கோல் விழாததால் கூடுதல் நேரம் தரப்பட்டது.
இந்த கூடுதல் நேரத்தின்போது ஜூட் பெல்லிங்ஹாம் தனது 2-வது கோலையடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். 93-வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இதைத் தொடர்ந்து நார்வே வீரர்கள் கோலடித்து சமநிலை பெறச் செய்ய போராடினர். ஆனால் அவர்களது முயற்சியை இங்கிலாந்து கோல்கீப்பர் அற்புதமாக தடுத்துவிட்டார். ஆட்டம் முடியும் வரை இதே நிலை நீடிக்கவே 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 16-ம் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் இங்கிலாந்து மோதவுள்ளது.
கேன், பெல்லிங்ஹாம் சாதனை
ஹாலண்டுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர்கள் ஹாரி கேன், பெல்லிங்ஹாம் ஆகியோர் தலா 6 கோல் அடித்துள்ளனர். உலக கோப்பையின் ஒரே தொடரில் ஒரே நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் தலா 6 கோல்களை அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இங்கிலாந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதிக கோல்கள் அடித்த வீரர்களில் இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர்.
முடிவுக்கு வந்த ஹாலண்டின் கனவு
கால் இறுதியில் தோல்வி கண்டதன் மூலம் கோல்டன் பூட் விருதை வெல்லும் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்டின் கனவு முடிவுக்கு வந்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக 7 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பே, மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில், நார்வே அணி இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல்டன் பூட் விருதைப் பெறும் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. அவர் 7 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். இராக், செனகல் அணிகளுக்கு எதிராக தலா 2 கோலும், 2-வது சுற்றில் ஐவரி கோஸ்ட்டுக்கு எதிராக ஒரு கோலும், 2-வது சுற்றில் பிரேசிலுக்கு எதிராக 2 கோலும் அடித்து இருந்தார். 5 முறை சாம்பியனான பிரேசிலை வெளியேற்றிய அவர் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான கால் இறுதியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அடைந்தார்.