

மே.இ.தீவுகள் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 249 ரன்கள் குவித்தும் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்தது.
250 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் வெற்றிகரமாக சேஸ் செய்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன் சேஸை பதிவு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களை கரீபியன் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கிய நிலையில், மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டன. இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தும் இந்திய அணியால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.
குறிப்பாக மயங்க் யாதவ் முதலிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தும் 249 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்கவில்லை எனில் ஸ்ரேயஸ் அய்யரின் கேப்டன்சி மீது சந்தேகமே எழுகின்றது. அயர்லாந்திடம் தோல்வி தழுவிய போது மைதானத்தின் பரிமாணங்கள் பனிப்பொழிவு என்றெல்லாம் காரணம் கூறினார், நேற்றைய தோல்விக்கும் பனிப்பொழிவைக் காரணம் காட்டுகிறார். இங்கிலாந்திடம் தோல்வி கண்ட போதும் சால்ஜாப்புகளே அவரது பதிலாக இருந்தது.
பனிப்பொழிவு என்பது போட்டிக்கு முன்னரே தெரியும் விஷயம், அப்போது அதற்கேற்ப இரண்டாவது திட்டம் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டாமா? ஏன் பிளான் பி இல்லை?
மேலும், குல்தீப் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்டோரை திரும்பத் திரும்ப செட் செய்த பீல்டிற்குத் தக்கவாறு ஒரே மாதிரியாக ஒரே மாதிரி பந்துகளையே வீசச்சொல்லி அய்யர் நிர்பந்திருப்பதும் தெரியவருகிறது, அதனால்தான் அர்ஸ்தீப் சிங், குல்தீப், அக்சர் படேல், நமன் தீர் பந்துகள் மீண்டும் மீண்டும் கவர் பாயிண்ட் திசையில் பவுண்டரிகளாகப் பறந்தன. இதைக் கட்டுப்படுத்த களவியூகத்திலும் கற்பனை வளத்துடன் அய்யர் செயல்படவில்லை.
ஷேய் ஹோப்பும், ருதர்ஃபோர்டும் இந்திய பவுலிங்கைக் கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்த போது அய்யரின் உடல் மொழி என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை என்பது போல் இருந்ததே தவிர, ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இல்லை.
ராஸ்டன் சேஸ் நேற்று அதியற்புதமாக வீசி 4 ஓவர்களில் 10 டாட்பால்களுடன் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் போது இந்திய ஸ்பின்னர்கள் அக்சர் படேல், குல்தீப் யாதவ், நமன் தீர் சேர்ந்து 9.3 ஓவர்களில் 141 ரன்களை விட்டுக் கொடுத்தது எப்படி? இவர்கள் ரன் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் வீசும் லெந்த்தில் பிரச்சினை என்றுதானே அர்த்தம். எங்கே பவுலிங் கோச் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்? மேலும், எங்கே அந்தத் திறமையான 6-வது பவுலர். நிச்சயமாக ஷிவம் துபே அந்த இடத்திற்கு லாயக்கில்லை என்பது திண்ணம்..
மயங்க் யாதவ் ஏன் 4வது ஓவரை வீசவில்லை? எல்லாவற்றயும் விட அபத்தம். 19வது ஓவர், மே.இ.தீவுகளுக்குத் தேவை 10 ரன்கள், அப்போது அக்சர் படேலிடம் கொடுத்தாரே பார்க்கலாம் ஸ்ரேயஸ் அய்யர். இது என்ன கேப்டன்சி. ஏற்கெனவே அக்சர் படேலைத்தான் பொளந்து கட்டி விட்டனரே?!
இந்த 10 ரன்களை இதே ஓவரில் அவர்கள் எடுத்து விட மாட்டார்கள் என்று கருதி மயங்க் யாதவ்வை 20வது ஓவருக்காக வைத்திருந்தேன் என்று அய்யர் சொன்னால் அதைப் போல மவுட்டிகமான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
19வது ஓவரிலேயே மணிக்கு 150 கிமீ வீசும் மயங்க் யாதவ்விடம் கொடுத்திருந்தால், அவரிடம் ஒரு எக்ஸ் ஃபாக்டர் உள்ளது, ஒருவேளை அவர் யார்க்கர்கள் 2 விக்கெட்டுகளைக் கொடுத்திருந்தால், கடைசி ஓவரில் 6-7 ரன்கள் தேவை என்னும் போது புதிய பேட்டர்களை பிரஷர் போட முடியுமே? ஏன் இதை அய்யர் யோசிக்கவில்லை. 19வது ஓவரிலேயே அல்வா போல் அக்சரிடம் பந்தைக் கொடுத்து மேட்சை முடித்து வைத்து விட்டார் அய்யர்.
அணித்தேர்வு, களவியூகம், பிளான் ஏ தோல்வி என்றால் பிளான் பி, பந்து வீச்சு மாற்றம் போன்றவற்றில் ஸ்ரேயஸ் அய்யர் தேறவில்லை எனில் சூரியகுமாரையோ அல்லது ஷுப்மன் கில்லிடமோதான் மீண்டும் கேப்டன்சியைக் கொடுக்க வேண்டும்..