

பல்லேகலே: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் 2.550 நிகர ரன் விகிதத்துடன் 2 புள்ளிகளை பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பேட் செய்த இங்கிலாந்து அணியால் 146 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. எனினும் வில் ஜேக்ஸ், லியாம் டாவ்சன், ஆதில் ரஷித் ஆகியோரது சுழல் மற்றும் தொடக்க ஓவர்களில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சரின் வேகம் ஆகியவற்றால் இலங்கை அணி 95 ரன்களுக்கு சுருண்டிருந்தது.
பேட்டிங்கில் அணி இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும் போதெல்லாம் வில் ஜேக்ஸ் கைகொடுக்கக்கூடியவராக இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரரான பில் சால்ட் இலங்கை அணிக்கு எதிராக 62 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பி இருந்தார். அவரிடம் மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
அதேவேளையில் ஜாஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பேன்டன், ஹாரி புரூக் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.
போட்டி நடைபெறும் பல்லேகலே மைதானத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை முழுமையாக 3-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றிருந்தது. இதே மைதானத்தில்தான் சூப்பர் 8 சுற்றிலும் இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது.
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் நியூஸிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி நடைபெறும் பல்லேகலே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது.
இதனால் உஸ்மான் தாரிக், சைம் அயூப், அப்ரார் அகமது, ஷதப் கான், முகமது நவாஷ் ஆகியோரை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு துறை இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். பேட்டிங்கில் சாஹிப்சதா ஃபர்ஹான் நடப்பு தொடரில் 220 ரன்கள் சேர்த்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.