மியாமி கார்டனில் நாளை மோதல்: எர்லிங் ஹாலண்டை சமாளிக்குமா இங்கிலாந்து? | FIFA WC 2026

மியாமி கார்டனில் நாளை மோதல்: எர்லிங் ஹாலண்டை சமாளிக்குமா இங்கிலாந்து? | FIFA WC 2026
Updated on
2 min read

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மியாமி ஹார்ட் ராக் மைதானத்தில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் காங்கோவையும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஜூட் பெல்லிங்காம் மிட்பீல்டில் ஆதிக்கம் செலுத்தியதோடு, தாக்குதலிலும் சிறப்பாக செயல்பட்டு 2 கோல்கள் அடித்தார். கேப்டன் ஹாரி கேன் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி முக்கிய தருணத்தில் கோல் அடித்து அசத்தினார். புக்காயோ சகா, பில் ஃபோடன் போன்ற வீரர்களின் வேகமும், படைப்பாற்றலும் எதிரணிகளுக்கு தொடர்ந்து சவாலாக அமைந்து வருகிறது.

பயிற்சியாளர் தாமஸ் டூக்கல் பொறுப்பேற்ற பிறகு, இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் தந்திர ரீதியான மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. பந்தை நீண்ட நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், வாய்ப்பு கிடைக்கும் போது வேகமாக தாக்குதலுக்கு மாறும் திறனும் அந்த அணிக்கு உள்ளது. அதேநேரத்தில், டிஃபென்சில் சில பலவீனங்கள் இருப்பது மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெளிப்பட்டது. அதை சரிசெய்வதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும்.

மறுபுறம், நடப்பு உலகக் கோப்பையின் ஆச்சரிய அணியாக நார்வே உருவெடுத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 5 முறை சாம்பியனான பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றி உலகக் கால்பந்தின் கவனத்தை நார்வே பக்கம் திருப்பியுள்ளது.

நார்வே அணியின் மிகப்பெரிய பலம் எர்லிங் ஹாலண்ட். சிறிய வாய்ப்பையும் கோலாக மாற்றும் திறன் கொண்ட அவர், இந்த தொடரில் 7 கோல்களை அடித்து அபாரமான பார்மில் உள்ளார். அவருக்கு பின்னால் விளையாடும் மார்டின் ஓடேகார்ட் ஆட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர். அவரது துல்லியமான பாஸ்களும், கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் திறனும் நார்வே தாக்குதல் ஆட்டத்துக்கு உயிரோட்டமாக உள்ளன. இவர்களுடன் அலெக்சாண்டர் சோர்லோத், ஆண்ட்ரியாஸ் ஷெல்டாரூப் உள்ளிட்ட வீரர்களும் தாக்குதலில் பங்களித்து வருகின்றனர்.

எர்லிங் ஹாலண்டை கட்டுப்படுத்த முடிந்தால், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும். அதேநேரத்தில், ஹாரி கேன், ஜூட் பெல்லிங்காமின் நகர்வுகளை நார்வே டிஃபென்ஸ் எவ்வாறு சமாளிக்கிறது என்பதும் முக்கியமானதாக இருக்கும்.

நேருக்கு நேர்

இங்கிலாந்து - நார்வே அணிகள் சர்வதேச கால்பந்து அரங்கில் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 7 வெற்றிகளையும், நார்வே 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. உலகக் கோப்பை கால்பந்து தொடரை பொறுத்தவரை இரு அணிகளும் தற்போதுதான் நேருக்கு நேர் மோத உள்ளன.

மியாமி கார்டனில் நாளை மோதல்: எர்லிங் ஹாலண்டை சமாளிக்குமா இங்கிலாந்து? | FIFA WC 2026
லார்ட்ஸ் டெஸ்ட்: மந்தனா, ஹர்மன்பிரீத் அரை சதம் விளாசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in