வைபவ் சூர்யவன்ஷியை காலி செய்யும் ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகள்!

வைபவ் சூர்யவன்ஷியை காலி செய்யும் ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகள்!
Updated on
2 min read

பெரிய எதிர்பார்ப்புகளுடன் அணியில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் ‘Wonder Boy’ வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட் என்றால் என்ன என்ற பால பாடத்தைக் கற்குமாறு செய்து விட்டார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுங்கியது. இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராக முதன் முறையாக இங்கிலாந்து டி20 தொடரை வென்றுள்ளது.

ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து இப்போது ‘நம்பர் 1’ டி20 அணியாக ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் காண ஷ்ரேயஸ் அய்யர் தலைமை இந்திய அணி 1-ம் இடத்திலிருந்து சரிந்துள்ளது.

மேலும், புரூக் கேப்டன்சியில் இங்கிலாந்து இப்போது 22 நிறைவடைந்த டி20 போட்டிகளில் 19-ல் வென்றுள்ளது. மாறாக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதுவும் முதல் முறையே. இதற்கு முன்பாக 5 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி தோற்றதில்லை.

‘மாற்றத்தில் இருக்கும் அணி’ என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர். ஆனால், தொடர் தோல்விகள்தான் உண்மையான மாற்றமாக இருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த தோல்விகள் வைபவ் சூர்யவன்ஷி என்னும் ‘வொண்டர் பாய்’ இந்திய அணிக்குள் பிரவேசிக்கும் போது நிகழ்வது சூர்யவன்ஷியின் கிரிக்கெட் கரியருக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும்.

சூர்யவன்ஷி இதனை நன்றாக உணருமாறு சீனியர் வீரர்கள் முன்னாள் பயிற்சியாளர்கள் அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.

3 போட்டிகளில் ஆர்ச்சருக்கு எதிராக 15 பந்துகளில் 18 ரன்களை 2 சிக்ஸர்களுடன் சூர்யவன்ஷி அடித்திருந்தாலும் இரண்டு முறை அவரை ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளில் வெளியேற்றியுள்ளார் ஆர்ச்சர். அதாவது உடலை நோக்கி ஒரு அதிவேக பவுன்சர் போட்டால் சூர்யவன்ஷி காலி என்பதை முகத்தில் ஒரு சிறு நையாண்டிப் புன்னகையுடன் நிகழ்த்திக் காட்டுகிறார் ஆர்ச்சர். ராஜஸ்தான் ராயல்ஸ் வலையில் இவர் பலமுறை ஆர்ச்சரை ஆடியிருக்கலாம், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதுவும் இங்கிலாந்துக்கு ஆடும்போது ஆர்ச்சர் என்பவர் வேறு ஒரு பவுலர். ராஜஸ்தான் நெட் பவுலர் அல்ல.

ஐபிஎல் தொடரின் வணிக நலன்களுக்காகப் போடப்படும் தட்டையான ரன் குவிப்பு பிட்ச்களில் அடிப்பது போன்று உண்மையான கிரிக்கெட் பிட்ச்களில் அடிக்க முடியாது, எனவே சூர்யவன்ஷி ஒரு முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராக ஹிட்டிங்கை விடுத்து டைமிங், வேகத்தைப் பயன்படுத்தி சூட்சுமமாக ஆடுவது போன்ற ஆழ் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் ஏன் மேதை என்றால் 15 வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியைக் கொண்ட அற்புத வீரராகத் திகழ்ந்ததால்தான் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜென் ‘ஸி’ கும்பல் உடனேயே சச்சினை விட இவர் பெரிய ஆள் என்றெல்லாம் பேசத் தொடங்கி இப்போது அதுவே இறங்குமுகமாகி விட்டது. ஆனாலும் சூர்யவன்ஷிக்கு இன்னமும் வயதும் காலமும் உள்ளது. ஒரு பெரிய வீரராவதற்கான தன்மை இவரிடம் உள்ளது, அதை முறையாக அவர் திசைவழிப்படுத்த வேண்டும்.

3-வது டி20யில் லெக் ஸ்டம்ப் பவுன்சரை ஹூக் செய்ய முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகிச் செல்ல, நேற்று அட்டகாசமான பவுன்சரை எதிர்கொள்ளும் எந்த ஒரு உடல் நகர்வும் இன்றி வெறுமனே மட்டையை மட்டும் சுழற்றி கொடியேற்றி ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. 3 போட்டிகளில் 13, 14, 15 என்று முடிந்தார்.

ஆர்ச்சரும், ஜாஷ் டங்கும் ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கொண்டு சூர்யவன்ஷியின் உடல் நோக்கி வீசுகின்றனர். அவரால் பொறுமை காக்க முடியவில்லை. தப்பும் தவறுமாக அடிப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் சூர்யவன்ஷி தவிக்கிறார்.

பயிற்சியாளர்கள் சூர்யவன்ஷியைத் தயார் செய்ய வேண்டும் அல்லது சூர்யவன்ஷி கொஞ்சம் பொறுமை காத்தால் அவருக்கென்றே பவுலர்கள் இங்கிலாந்தில் உள்ளனர் சாம் கரன், ஆதில் ரஷீத் போன்றவர்களை அவர் பிரித்து எடுக்கலாம். ஆகவே ஈகோவை விடுத்து ஆர்ச்சர், ஜாஷ் டங்கை எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். கரியர் முக்கியம் இல்லையெனில் விரைவில் முடிந்து விடுவார் சூர்யவன்ஷி.

வைபவ் சூர்யவன்ஷியை காலி செய்யும் ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகள்!
மொராக்கோ கனவைத் தகர்த்த பிரான்ஸ் - பெனால்டியை நழுவ விட்டாலும் எம்பாப்பே அபாரம் |FIFA WC 2026 காலிறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in