

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவருமான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இருவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இவர்களது திருமணம் சாங்லியிலுள்ள ஸ்மிருதியின் பண்ணை வீட்டில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞசுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாக ஸ்மிருதி அறிவித்தார்.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. இதன் தொடர்ச்சியாக, தனது திருமணத்தை ரத்து செய்வதாக ஸ்மிருதி அறிவித்தார்.
இந்தச் சூழலில் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல், தனது திருமணம் ரத்தானது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என விளக்கம் கொடுத்துள்ளார்.
“நான் புனிதமானதாக கருதும் ஒன்று குறித்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு மக்கள் எளிதாக எதிர்வினையாற்றுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது என் வாழ்வின் கடினமான கட்டம். என் நம்பிக்கைகளை கொண்டு அதை கையாள்வேன்.
அடையாளம் தெரியாதவர்கள் பகிரும் சரிபார்க்கப்படாத வதந்திகளை கொண்டு ஒருவரை மதிப்பிடுவதை ஒரு சமூகமாக நாம் நிறுத்தக் கற்றுக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அது குற்றச்சாட்டுக்கு ஆளானவரை காயப்படுத்தக்கூடும். அது நமக்கு புரியாது.
தவறான மற்றும் அவதூறு கருத்துகளை பகிர்ந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எனது குழு மேற்கொள்கிறது. இந்த நேரத்தில் என்னோடு நின்ற அனைவருக்கும் நன்றி.
என் வாழ்வின் தனிப்பட்ட உறவு முடிந்தது. அதில் இருந்து வெளியேறி வாழ்வில் கடந்து செல்ல முடிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருமணம் ரத்து குறித்து ஸ்மிருதி மந்தனா கூறும்போது, ‘‘என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. எனது திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்’’ என்றார்.