

அட்லான்டா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 62-வது நிமிடத்தில் எகிப்தின் மொஸ்டபா ஜிகோ அடித்த கோல் நிராகரிக்கப்பட்டது. கோல் அடிப்பதற்கான முன்னெடுப்பின் போது அர்ஜெண்டினா அணியின் டிஃபென்டர் லிசாண்ட்ரோ மார்டினெஸ் காலை எகிப்தின் மர்வான் அத்தியா மிதிப்பது கண்டறியப்பட்டது.
இதனால் விஏஆர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறுஆய்வு செய்து ஜிகோ அடித்த கோல் ரத்து செய்யப்பட்டது. அதேவேளையில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் எகிப்து அணியின் வீரர் முகமது சாலாவை அர்ஜெண்டினா அணியின் வீரர் ஜூலியன் ஆல்வரெஸ் ஃபவுல் செய்தார். இதை களநடுவர் கண்டறியவில்லை. விஏஆர் தொழில்நுட்பம் தலையிடவில்லை. இந்த இரு நிகழ்வுகளும் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எகிப்து அணியின் பயிற்சியாளரும், அந்நாட்டு கால்பந்து சங்கத்தினரும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பிஃபாவிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர் பியர்லூகி கொலினா கூறியதாவது: ஒவ்வொரு கோல் அடிக்கப்பட்ட பிறகும், விஏஆர் தொழில்நுட்பம் கொண்டு பந்து எவ்வாறு வசப்படுத்தப்பட்டு கடத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கோல் அடிக்கப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் ஏதேனும் ஃபவுல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அது கோல் அடிக்கப்பட்டதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டால், கள நடுவர் அதை மீண்டும் சரிபார்க்க விஏஆர் தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பார்.
சம்பந்தப்பட்ட அந்த ஃபவுல் நிகழ்விற்கும் கோல் அடிக்கப்பட்டதற்கும் இடையே உள்ள தூரம் அல்லது நேரத்தின் அளவு குறித்து எந்தவொரு வரையறையும் இல்லை. அந்த வகையில் எகிப்து வீரர் மார்வன் அட்டியா, அர்ஜெண்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸின் காலைத் தெளிவாக மிதித்துள்ளார். ஃபவுல் என்றால் அது ஃபவுல் தான் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த ஃபவுல் ‘வெளிப்படையானதாக’ தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், களத்தில் உள்ள நடுவர் அதைக் கவனிக்கத் தவறியிருந்தால், விஏஆர் தலையிட முடியும்.
கோல் அடிக்கப்படுவதற்கு முந்தைய ஆட்ட உருவாக்கத்தில் எந்தவொரு ஃபவுலும் கண்டறியப்படவில்லை எனில், விஏஆர் அதற்கு ஏற்ப நடுவருக்குத் தகவல் தெரிவிக்கும். எதிரணி வீரரின் காலில் மிதிப்பது ஃபவுல் ஆகும், அதே நேரத்தில் டிஃபெண்டர் பந்தை முதலில் தொட்ட பிறகு, எதிரணி வீரருடன் ஏற்படும் சாதாரண கால்பந்து தொடர்பு ஃபவுலாகக் கருதப்படாது.
இதற்கு சிறந்த உதாரணம் அதே போட்டியின் இறுதியில் நிகழ்ந்தது. எகிப்து அணியின் வீரர் முகமது சாலா, அர்ஜெண்டினா அணியின் வீரர் ஜூலியன் ஆல்வரெஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டது சாதாரண கால்பந்து தொடர்புதான் என்று கள நடுவரும் விஏஆர் தொழில்நுட்பமும் கருதியது. போட்டியின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
இது எப்போதும் கால்பந்தின் ஒரு பகுதியாகவே இருக்கும், ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கால்பந்து விளையாட்டில் இடமில்லை. பிஃபா உலகக் கோப்பை போட்டி நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதேபோல், பிஃபா நடுவர் குழுவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
பிஃபா தலைவர் கூட செல்வாக்கு செலுத்த முடியாது. பிஃபா தலைவர் எங்களை முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்துள்ளார். எங்களது குழுவுக்கு அவர், எப்போதும் தனது முழு ஆதரவை வழங்கி வருகிறார். போட்டி நடுவர்கள் நேர்மையான முடிவுகளை எடுக்கிறார்கள். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைப் போலவே அவர்களும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கவே முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.