

ஆர்லிங்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் ஆர்லிங்டனில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் எகிப்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் முகமது சாலாவின் சாதுரியமான ஃப்ரீ-கிக் ஃபிளிக் இமாம் அஷூரை நோக்கிப் பாய, அவர் அடித்த ஷாட்டை ஆஸ்திரேலிய டிஃபென்ஸ் முழுமையாகக் கிளியர் செய்யத் தவறியது.
இதனால் பாக்ஸின் வலதுபுறம் சென்ற பந்தை ஹாஃபெஸ், பேக்-போஸ்ட்டில் நின்றிருந்த இமாம் அஷூரை நோக்கி பிரமாதமான கிராஸை காற்றில் அடித்தார். எழும்பி வந்த பந்தை இமாம் அஷூர் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் எகிப்து 1-0 என முன்னிலை பெற்றது.
55-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் இடது பக்கவாட்டில் ஓ’நீலை, எகிப்து அணியின் ஜிகோ கீழே தள்ளிவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஃப்ரீ-கிக் வழங்கப்பட்டது. இதில், ஓ’நீல், பெனால்டி பாக்ஸிற்குள் அடித்த பந்தை எகிப்து வீரர் முகமது ஹானி காற்றில் உயரமாக எழும்பி, பந்தைத் தட்டிவிட முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது சுய கோலாக மாறியது.
இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவிலும் இதே நிலையே நீடித்தது. இதன் பின்னர் வழங்கப்பட்ட 30 நிமிடங்கள் கூடுதல் நேரத்திலும் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் எகிப்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மஹ்மூத் சாபர், ராமி ரபியா, முகமது சாலா, ஹொசாம் அப்தெல்மகித் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் வாய்ப்பில் ஹாரி சவுட்டர் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்றது. அந்த அணியின் அடுத்த இரு வாய்ப்புகளில் ஜேக்சன் இர்வின், மாபில் கோல் அடித்தனர். 4-வது வாய்ப்பில் லூகாஸ் பெரிங்டன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே வென்றது.
உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நாக் அவுட் சுற்றில் கால்பதித்து இருந்த எகிப்து அணி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. வரும் 6-ம் தேதி நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது எகிப்து அணி.
ஒரே தொடரில் 2 சுய கோல்கள்
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 55-வது நிமிடத்தில் எகிப்து அணியின் முகமது ஹானி சுய கோல் அடித்தார். முன்னதாக லீக் சுற்றில் பெல்ஜியம் அணிக்கு எதிரான 1-1 என்ற டிரா ஆட்டத்திலும் முகமது ஹானி சுய கோல் அடித்திருந்தார். இதன் மூலம் ஒரே தொடரில் 2 சுய கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் முகமது ஹானி.