“ஐபிஎல் தரும் உடனடி பணம், புகழுக்கு மயங்காதீர்கள்” - இளம் வீரர்களுக்கு கோலி அட்வைஸ்

“ஐபிஎல் தரும் உடனடி பணம், புகழுக்கு மயங்காதீர்கள்” - இளம் வீரர்களுக்கு கோலி அட்வைஸ்
Updated on
2 min read

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மூலம் கிடைக்கும் உடனடி புகழும், பெரும் பண வருமானமும் மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், நீண்டகால அர்ப்பணிப்புடன் உலக கிரிக்கெட்டில் மரியாதை பெறும் நோக்கத்துடன் விளையாட வேண்டும் என்று லெஜண்ட் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

ஆர்சிபி அணி நடத்திய புத்தாக்க லேபில் பேசிய விராட் கோலி, ஐபிஎல் பணமழை, புகழ் மழை கொடுக்கும் உடனடி மயக்கத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இளைஞர்களை எச்சரித்தார். ஃபிராஞ்சைஸ் கிரிக்கெட்டின் எழுச்சி இளம் வீரர்களின் மனப்போக்கையே மாற்றியுள்ளதாக கூறினார். சில அதிரடி இன்னிங்ஸ்களிலேயே புகழும் பணமும் கிடைப்பதால், நீண்டகால கிரிக்கெட் பயணத்தின் அருமையை பலர் மறந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கோலி கூறியது: “இப்போது பலர் உந்துதல் அல்லது வேட்கை என்பதைக் கூட பணத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். ஆம், பணம் ஒரு பெரிய காரணம் தான். குறிப்பாக, 20 பந்துகளில் 40 அல்லது 50 ரன்கள் அடித்தாலே பெரும் புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் ஒரு வடிவம் உருவாகியுள்ளது. இன்று ஐபிஎலில் வீரர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களை மிகவும் வசதியான நிலையில் வைத்துவிடுகிறது.

அப்போது அவர்கள், ‘இதுவே அருமை. நீண்ட கால அழுத்தத்தை சமாளிக்க வேண்டியதில்லை. களத்துக்குச் சென்று பந்தை அடித்து நொறுக்கி விளையாடினால் போதும்’ என்று நினைக்கலாம். ஆனால் இன்னொரு பாதையும் இருக்கிறது. ‘நான் 15 அல்லது 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும்.

உலக கிரிக்கெட்டின் மரியாதையையும், என் முன்னோடிகளின் பாராட்டையும் பெற வேண்டும். இந்த வாய்ப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’ என்று நினைக்கும் பாதையும் உங்களுக்கு உள்ளது. அது முற்றிலும் வேறுபட்ட மனநிலை. அப்படி சிந்திக்க மிகுந்த உந்துசக்தி வேண்டும்.

‘அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் இதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன். இது மிகவும் கடினமான பயணம் தான். ஆனால் அதை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்ல வேண்டும். இன்றைய இளம் வீரர்கள் அதிரடி பேட்டிங்கிலும் பவர் ஹிட்டிங்கிலும் மிகவும் முன்னேறியுள்ளனர். ஆனால், கடினமான சூழ்நிலைகளில் இன்னிங்ஸை கட்டுப்படுத்தி அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வதே உண்மையான திறமை.

இந்த தலைமுறை வீரர்கள் பவர் ஹிட்டிங்கில் கில்லாடிகளாக உள்ளனர். ஆனால் சிக்கலான பிட்சில் 175 அல்லது 180 ரன்களை துரத்தும்போது, அணி இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தால் என்ன செய்வது?

அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பேட்டிங்கை மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். ஒரே மாதிரி விளையாடுவது போதாது. ஏழு அல்லது எட்டு விதமாக பேட் செய்யும் திறன் இருக்க வேண்டும்.

பிட்ச் பவுண்டரிகளை அடிக்க அனுமதிக்கவில்லை என்றால், ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறன் இருக்க வேண்டும். எனக்கு கிரிக்கெட் என்பது ஆட்டத்தை உடைத்துப் புரிந்து கொள்வது. எந்தச் சூழ்நிலையில் எப்படி அணுக வேண்டும் என்பதை அறிதல்.

அதற்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் என்னை தயார்படுத்த வேண்டும். உங்கள் திறமைகளை வெளிக்கொணர மனதளவில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் முக்கியம்” என்று இளம் வீரர்களுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

“ஐபிஎல் தரும் உடனடி பணம், புகழுக்கு மயங்காதீர்கள்” - இளம் வீரர்களுக்கு கோலி அட்வைஸ்
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் - கெயில் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in