2027 உலகக் கோப்பைக்கு ஷமி தேவையா? - தினேஷ் கார்த்திக் மாறுபட்ட கருத்து

ஷமி, தினேஷ் கார்த்திக்

ஷமி, தினேஷ் கார்த்திக்

Updated on: 
2 min read

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில், குறிப்பாக 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமியை மீண்டும் சேர்ப்பது குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

2027-ம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டால், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி போதுமான அளவு வலுவாக இருப்பதாகவும், ஏற்கனவே அணித்தேர்வுக்குழு அவரைத் தேர்வு செய்வதிலிருந்து விலகிச் சென்ற பிறகே ஷமியை மீண்டும் அழைத்து வருவதில் பயனில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய ஷமி, நீண்ட கால காயத்துக்குப் பிறகு அணிக்கு திரும்பினார். அதன்பிறகு அவரது உடற்தகுதி குறித்து அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் நம்பிக்கை கொள்ளாத நிலையில், இந்திய அணி புதிய வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி கவனம் செலுத்தியது. ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், அன்ஷுல் காம்போஜ், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவில் இடம் பெற்றனர்.

எனினும், இந்திய அணி மோசமாக செயல்படும் ஒவ்வொரு முறையும் ஷமியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 351 ரன்களை எடுத்தும் இந்திய அணியால் அதை பாதுகாக்க முடியாததைத் தொடர்ந்து, ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணிக்கு அழைக்க வேண்டும் என்ற கருத்துகள் வலுத்தன. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஷமியும் தனது திறமையை நிரூபித்து வந்தாலும், இந்திய அணியின் எதிர்காலத் திட்டங்களில் அவர் இடம்பெறவில்லை.

ஷமியின் இடம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “இல்லை. இந்திய அணியில் வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஷமியைத் தாண்டி இந்திய அணி நகர்ந்துவிட்டது. மீண்டும் அவரிடம் செல்வதில் எந்தப் பயனும் இல்லை. அவர் சிறப்பாகப் பந்துவீசி இருந்தாலும், நான் ஷமியை அணியில் சேர்ப்பது குறித்து யோசிக்க மாட்டேன்” என்றார்.

ஷமி இல்லாத நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் இணைந்து விளையாடுவதற்கான சிறந்த தேர்வாக ஹர்ஷித் ராணா உருவெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து உடற்தகுதியுடன் இருப்பார் என இந்திய அணி நம்புகிறது.

இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்காக அர்ஷ்தீப் சிங், சிராஜுக்கு போட்டியாக இருக்கலாம். அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 உலகக் கோப்பையில் முக்கியத்துவம் பெறக்கூடிய, வேகத்துடன் பந்தை பிட்சில் வேகமாகத் தாக்கி வீசும் பாணியிலான பந்துவீச்சாளருக்கான இடத்துக்கு குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் போட்டியிடலாம்.

ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் அடுத்த உலகக் கோப்பை நடக்கவிருப்பதால் அங்கிருக்கும் பிட்ச்களுக்கு ஷமியின் அனுபவம் கூடுதல் கைகொடுக்கும் என்பதோடு எதிரணியினர் அச்சப்படும் ஒரு பவுலராக ஷமி திகழ்வார் என்பதில் ஐயமில்லை, ஷமியை ஒப்பிடும் போது பிரசித் கிருஷ்ணா, சாத்து வாங்கி வரும் குர்னூர் பிரார், அன்ஷுல் காம்போஜ் போன்றோரை அவருக்கு ஈடாக எப்படிச் சொல்ல முடியும்?

இதற்கிடையே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவர்கள் இல்லாமல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் சரிவை சந்திக்குமா என்றும் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ஆம். ஏனெனில் அவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். உலக கிரிக்கெட்டின் மையமாக இந்தியா இருக்கும் நிலையில், சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இருவர் அணியில் இருந்து விலகினால், அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்” என்றார் தினேஷ் கார்த்திக்.

<div class="paragraphs"><p>ஷமி,&nbsp;தினேஷ் கார்த்திக்</p></div>
ரஷ்ய பிளேக் தடுப்பு ஆய்வக ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு: தீவிர கண்காணிப்பில் 200+ பேர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in