

லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் பிரேமானந்த் மகராஜின் பக்தர்களாக உள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு பலமுறை சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலி கடந்த 2023-ம் ஆண்டு முதல்முறையாக ஆசிரமத்துக்கு வந்தபோது அவருக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டதாக ஃபலஹாரி மகராஜ் தினேஷ் சர்மா என்பவர் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். ஆசிரமத்தை பிரபலப்படுத்துவதற்காகவே இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் அவர், கூறியிருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோலியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராட் கோலி தொடர்பாக ஃபலஹாரி மகராஜ் தினேஷ் சர்மா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். பிரேமானந்த் மகராஜ் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மரியாதை காரணமாக விராட் கோலி தனது மனைவியுடன் ஆசிரமம் சென்று வந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமானந்த் மகராஜ் ஆசிரமத்துக்கு விராட் கோலி முக்கியமான தருணங்களிலும் சென்று வந்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர், ஆசிரமத்துக்குச் சென்றிருந்தார். கடைசியாக தனது மனைவியுடன் விராட் கோலி கடந்த ஜூலை மாதம் ஆசிரமம் சென்றிருந்தார்.