

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
சஞ்சு சாம்சன் 7 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் சேவியர் பார்ட்லெட் பந்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மட்டையை சுழற்றினார். சேவியர் பார்ட்லெட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டினார். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 29 பந்துகளில், சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். ஆயுஷ் மாத்ரே அதிரடியால் சிஎஸ்கே அணி 10 ஓவர்களில் 101 ரன்களை குவித்தது.
மறுபுறம் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக பேட் செய்து வந்த ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் விஜயகுமார் வைஷாக் பந்தில் ஷார்ட் தேர்டுமேன் திசையில் நின்ற யுவேந்திர சாஹலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கார்த்திக் சர்மா 1 ரன்னில் மார்கோ யான்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய சர்ஃபராஸ் கான் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். அர்ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் சர்ஃபராஸ் கான் 3 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து சேவியர் பார்ட்லெட் வீசிய அடுத்த ஓவரில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார் சர்ஃபராஸ் கான்.
விஜயகுமார் வைஷாக் வீசிய 17-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விரட்டிய சஃர்பராஸ் கான் 4வது பந்தில் மிட் ஆன் திசையில் விளாசிய போது நேகல் வதேராவிடம் கேட்ச் ஆனது. 12 பந்துகளை சந்தித்த சர்ஃபராஸ் கான் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார். இதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட ஓவர்களில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார்.
மார்கோ யான்சன் வீசிய 18-வது ஓவரின் பந்தை ஷிவம் துபே டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். சேவியர் பார்ட்லெட் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளையும், அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளையும் விரட்டி அசத்தினார் ஷிவம் துபே. இதனால் 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
ஷிவம் துபே 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், பிரசாந்த் வீர் 7 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார்.
மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். பிரப்சிம்ரன் சிங் தனது பங்குக்கு பவுண்டரி ஒன்றை அடிக்க இந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டன. அன்ஷுல் கம்போஜ் வீசிய 4-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரிகள் விரட்டினார். மட்டையை சுழற்றிய பிரியன்ஷ் ஆர்யா 11 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசிய நிலையில் மேட் ஹென்றி பந்தில் போல்டானார்.
முதல் விக்கெட்டுக்கு பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஜோடி 4.2 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. இதையடுத்து கூப்பர் கானொலி களமிறங்கினார். சீராக ரன்கள் சேர்த்து வந்த பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் சர்ஃபராஸ் கான்-ருதுராஜ் கெய்க்வாட்டின் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 103 ரன்கள் குவித்தது.
கூப்பர் கானொலி 22 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தைலாங் ஆஃப் திசையில் விளாசிய போது மேட் ஹென்றியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து நேகல் வதேரா களமிறங்கினார். 16 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 33 ரன்கள் தேவையாக இருந்தன.
அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசிய நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில், 24 ரன்கள் தேவையாக இருந்தன. மேட் ஹென்றி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் வதேரா (10) ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஷசாங் சிங் 14 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்களும் சேர்க்க பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 200+ ரன்கள் குவித்து தோல்வி அடைவது இது 5-வது முறையாகும். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியிருந்தது.
அதேவேளையில் சிஎஸ்கேவுக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து இருந்தது.
பிரியன்ஸ் ஆர்யா ஆட்ட நாயகன்
சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (5-ம் தேதி) பெங்களூருவில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 5-வது தோல்வியாகவும் இது அமைந்தது. ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் பிரியன்ஸ் ஆர்யா தேர்வானார்.
31 ஆயிரம் ரசிகர்கள்
போட்டியை காண மைதானத்தில் சுமார் 31,363 ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
பந்துவீச அதிக நேரம்
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்தை பந்துவீசுவதற்கு பஞ்சாப் அணி எடுத்துக் கொண்டதால் அந்த அணிக்கு கடைசி 2 ஓவர்களில் வெளிவட்ட பீல்டிங்கில் 4 பீல்டர்களை மட்டுமே நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இது முதல்முறை
சிஎஸ்கே அணியின் விளையாடும் லெவனில் 2 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே (நூர் அகமது, மேட் ஹென்றி) இடம் பெற்று இருந்தனர். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியில் இது போன்று நிகழ்வது இதுவே முதன்முறை.
6வது முறையாக 200+ ஸ்கோர்
சிஎஸ்கே அணி 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே 200+ ரன்களை குவிப்பது இது 6வது முறையாகும். இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்களை அதிக முறை குவித்த அணி என்ற சாதனையை ஆர்சிபி அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது சிஎஸ்கே அணி.
51 வைடுகள்
ஐபிஎல் தொடரில் 2024 ஆண்டு முதல் இதுவரை பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் 51 வைடுகளை வீசியுள்ளார். இந்த வகையில் அதிக வைடுகளை வீசியவர்களின் பட்டியலில் முகமது சிராஜுடன் இணைந்துள்ளார்.