

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய டெல்லி கிரிக்கெட் வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்து உள்ளார்.
இந்தியா, இலங்கையில் கடந்த மாதம் நிறைவடைந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டித் தொடரில் 308 ரன்களைக் குவித்தார் பிரதிகா ராவல். மேலும் இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் அவர் பிடித்தார்.
வங்க தேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடும்போது காயமடைந்த அவர், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில் மகளிர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக விளையாடிய பிரதிகாவுக்கு முதல்வர் ரேகா குப்தா ரூ.1.5 கோடி பரிசு வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளப்பதிவில் கூறும்போது, “இன்று, முதல்வரின் ‘ஜன் சேவா சதனில்’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் திறமையான இளம் வீராங்கனை பிரதிகா ராவலை வரவேற்றோம்.
எங்கள் மகள் பிரதிகா, டெல்லிக்குப் பெருமை சேர்த்துள்ளார். விளையாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரிக்கும் வகையில், டெல்லி அரசு அவருக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்க உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.