

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து இருந்த நிலையில் கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பி இருந்தது. இது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.
இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசியிருந்தார். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பார்மின்றி தவித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆட்டங்களிலும் முறையே அவர் 6, 28, 7 மற்றும் 15 ரன்கள் எடுத்திருந்தார். பவர்பிளேவில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.
சர்ஃபராஸ் கான், டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோர் தங்களது அதிரடியால் நடுவரிசையில் வலு சேர்க்கக்கூடும். கணுக்காலில் காயம் அடைந்துள்ள சீனியர் நட்சத்திரமான எம்.எஸ்.தோனி கடந்த சில நாட்களாக வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.
பந்துவீச்சை பொறுத்தவரையில் டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஜேமி ஓவர்டன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். 4 ஓவர்களை வீசிய அவர், 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இதேபோன்று தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் கூடுதல் பவுன்ஸ்களை வீசி கவனம் ஈர்த்தார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹோசைனும் பவர்பிளேவில் புதிய பரிமாணத்தைச் சேர்த்தார். நூர் அகமது, கலீல் அகமது ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 54 ரன்களை விளாசி கொல்கத்தா அணியின் வெற்றியை பறித்திருந்தார்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரரான ஃபின் ஆலனிடம் இருந்து பெரிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. 4 ஆட்டங்களில் அவர், 80 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் ரஹானே ஒரு அரை சதத்துடன் 124 ரன்கள் எடுத்துள்ளார். 3-வது வரிசையில் அங்ரிஷ் ரகுவன்ஷி 2 அரை சதங்களுடன் 155 ரன்கள் எடுத்துள்ளார். ரஹானேவும், ரகுவன்ஷியும் பவர்பிளேவில் சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஆனால் இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அணியின் ரன் குவிப்பில் பெரிய தொய்வு ஏற்படுவது பின்னடைவாக உள்ளது. நடுவரிசையில் கேமரூன் கிரீன், ரோவ்மன் பவல், ரிங்கு சிங் ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பேட்டிங் வெளிப்படவில்லை. பந்துவீச்சில் கடந்த காலங்களில் சுழலில் ஆதிக்கம் செலுத்திய வருண் சக்ரவர்த்தி இம்முறை அதிக ரன்களை வாரி வழங்குவது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று சுனில் நரேன் பந்துவீச்சும் இம்முறை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இவர்களுடன் வேகப்பந்துவீச்சில் கார்த்திக் தியாகி, பிளெஸ்ஸிங் முசாரபானி, வைபவ் அரோரா ஆகியோர் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெறுவதற்கான வழிகளை கொல்கத்தா அணி கண்டறிய முடியும்.
வருண் சந்தேகம்: கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் கை விரலில் பேன்டேஜ் சுற்றியபடி வருண் சக்ரவர்த்தி பயிற்சியில் ஈடுபட்டார். எனினும் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
சேப்பாக்கமும் ஃபின் ஆலனும்.. சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் போது நியூஸிலாந்தின் ஃபின் ஆலன் 50 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஃபின் ஆலன் சிறப்பாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.