

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே, சிஎஸ்கே அணிக்கு எஞ்சிய அனைத்துப் போட்டிகளும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மும்பையுடனான போட்டியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி இந்தத் தொடரில் 2-வது சதத்தைப் பதிவு செய்தார். மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையிலும் ஒரு முனையில் நங்கூரம் போல் நின்று சதத்தை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் சஞ்சு சாம்சன். எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவரிடமிருந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டிடமிருந்து எதிர்பார்த்த அதிரடி ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் இதுவரை 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ருதுராஜுக்கு வந்துள்ளது. அதேபோல் சர்ப்ராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன் ஆகியோரிடமிருந்து குறிப்பிடத்தக்க ரன்கள் வரும்போது அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவக்கூடும்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் பந்துவீசி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார் அகீல் ஹொசைன். அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். எனவே, அவர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு அதிக அழுத்தத்தைத் தரக்கூடும்.
அதேபோல் முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, ஜேமி ஓவர்டன், குர்ஜப்நீத் சிங் ஆகியோரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலைத் தரக்கூடும்.
அதேநேரத்தில் குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று களமிறங்குகிறது. கடைசியாக நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் முறையே மும்பை, பெங்களூரு அணிகளுடன் தோல்வி கண்ட நிலையில் அந்த அணி சென்னை வந்துள்ளது.
அணியின் பேட்டிங், பந்துவீச்சு வலுவாக இருந்தபோதும், வெற்றிக்கான வழிகளை அந்த அணியால் கண்டறிய முடியவில்லை. பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் அந்த அணி 205 ரன்களைக் குவித்தது. ஆனாலும் பெங்களூரு அணியின் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. எனவே, இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றியைப் பெறுவதற்கான வழிகளில் இறங்கக்கூடும்.
குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் சதம் விளாசிய சாய் சுதர்ஷனிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படக்கூடும்.
அதேபோல் கேப்டன் ஷுப்மன் கில்லும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா ஆகியோரும் உறுதுணையாக இருக்கும்பட்சத்தில் அது சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியை அளிக்கும்.
அதேபோல், பந்துவீச்சில் முகமது சிராஜ், காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா என வலுவான வரிசையுடன் குஜராத் அணி களமிறங்குகிறது.