

டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள் என கூறப்படும் 16 முதல் 20 ஓவர்கள் வரையிலான காலக்கட்டம் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் தங்களது பல்வேறு திறன்களை கையாண்டு எதிரணியின் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள அனுமதிக்காமல் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணி மாற்று சிந்தனைகள் இல்லாமலும், செயலற்ற தன்மையுடன் இருப்பதாக விமர்சனங்கள் எழத்தொடங்கி உள்ளன. 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் 12.1 ஓவர்களிலேயே முடிவடைந்தது.
சிஎஸ்கேவுக்கு எதிராக 128 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணி 47 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இதை தவிர்த்து பஞ்சாப், ஆர்சிபி அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி டெத் ஓவர்களில் 40 பந்துகளை வீசி 111 ரன்களை தாரைவார்த்துள்ளது. இது மோசமான சாதனையாகும். ஏனெனில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கேவின் எகானமி ரேட் 16.65 ஆக உள்ளது. இது மற்ற அணிகளைவிட மோசமானது. நேற்று முன்தினம் பெங்களூருவில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி 250 ரன்களை குவித்தது.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 250 ரன்களை தாரை வார்த்தது இதுவே முதன்முறையாகும். மேலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே 78 ரன்களை வாரி வழங்கியது. இதுவும் முதன்முறையாக நிகழ்ந்தது. அனைத்துக்கும் மேலாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்ட ஓவர்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினர். 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது.
ஆனால், அப்போதும் கூட அவர்களின் டெத்-ஓவர் எகானமி ரேட் 11 ஆகவே இருந்தது. நடப்பு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இறுதிக்கட்டத்தில் 2.4 ஓவர்களில் 33 ரன்களை தாரைவார்த்து இருந்தது. இதனால் 210 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 8 பந்துகளை மீதம் வைத்து எந்த வித நெருக்கடியும் இல்லாமல் வெற்றி கண்டது. நேற்று முன்தினம் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களான டிம் டேவிட், ரஜத் பட்டிதார் கூட்டணி கடைசி 4 ஓவர்களில் 78 ரன்களை வேட்டையாடியது.
இது ஐபிஎல் வரலாற்றிலேயே கடைசி நான்கு ஓவர்களில் ஒரு அணி விட்டுக்கொடுத்த ஐந்தாவது அதிகபட்ச ரன்களாகும். ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாகவே செயல்பட்டனர். 5-வது ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றினர். பந்து சற்று மெதுவாக வரும் ஆடுகளம் மற்றும் வேகம் குறைந்த அவுட்ஃபீல்டு ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி, பவர்பிளேயில் ஆர்சிபி-யை 51 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். 11 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது, அதாவது ஓவருக்கு ஒன்பது ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தது.
அதன் பின்னரே ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. ஆடுகளம் பேட்டிங் செய்ய எளிதானதாலும் ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அதிரடியைத் தொடங்கியதாலும், பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்தனர். அடுத்த 5 ஓவர்களில் 74 ரன்கள் விளாசப்பட்டன. தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய டிம் டேவிட் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். இதில் சிஎஸ்கே நிலைதடுமாறியது. திட்டமிடலையும், அதை செயல்படுத்தும் விதத்திலும் சிஎஸ்கே நிலைகுலைந்தது.
டெத் ஓவர்களில் சிஎஸ்கே வீசிய பந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஃபுல் டாஸ் அல்லது ஃபுல் லெந்த் பந்துகளாகவே இருந்தன. ஒரே ஒரு யார்க்கர் மட்டுமே வீசப்பட்டது. பந்துகளின் நீளத்திலோ அல்லது வேகத்திலோ பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்தது. இதன் விளைவாக, கடைசி நான்கு ஓவர்களில் ஆர்சிபி அணி 9 சிக்ஸர்களை விளாசியது. இதில் டிம் டேவிட் மட்டுமே தனி ஆளாக 8 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு டெத் ஓவர்களில் பந்துவீசிய அனுபவம் இல்லை என்று சொல்ல முடியாது. நூர் அகமது ஆர்சிபி போட்டிக்கு முன்னதாக, ஐபிஎல் தொடரின் டெத் ஓவர்களில் 14 ஓவர்களுக்கு மேல் வீசியுள்ளார். அவரது எகானமி ரேட் 8.02 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் அவர் வீசிய 17-வது ஓவரில் மட்டும் 21 ரன்கள் விளாசப்பட்டது.
2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து டி 20 போட்டிகளில் ஜேமி ஓவர்டனின் டெத்-ஓவர் எகானமி 9.26 ஆக இருந்தது. ஆனால், இவர் வீசிய 19-வது ஓவரில் டிம் டேவிட் 30 ரன்களைக் குவித்து சிஎஸ்கே அணியை கடும் சிதைவுக்கு உட்படுத்தினார். அன்ஷுல் கம்போஜ் சிறந்த யார்க்கர் மூலம் டிம் டேவிட்டை ஆட்டமிழக்கச் செய்தார், ஆனால் அது ‘நோ-பால்’ ஆகிவிட்டது. இந்த தவறு சிஎஸ்கே அணிக்கு 40 ரன்களுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியது. அப்போது டிம் டேவிட் 29 ரன்களில் இருந்தார். இறுதியில் அவர், 70 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தார்.
தனது முதல் மூன்று ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த நூர் அகமது, தனது கடைசி ஓவரில் பந்துகளை வேகமாக வீசினார். ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் சுழலாததால் டிம் டேவிட் அந்தப் பந்துகளை மிக எளிதாக சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார். 19-வது ஓவரில் ஜேமி ஓவர்டன் தொடர்ந்து பேட்டருக்கு வசதியாக ஸ்லாட்டிலேயே வீசினார்.
டிம் டேவிட் அவற்றை எல்லைக்கோட்டிற்கு வெளியே அனுப்பிக்கொண்டே இருந்தார். அன்ஷுல் கம்போஜ் ஓரளவுக்கு சிறப்பாக வீசினார், ஆனால் முக்கியமான நேரத்தில் அவர் வீசிய நோ-பால் எல்லாவற்றையும் பாழாக்கியது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “பந்து வீச்சில் நாங்கள் செயலற்ற நிலையில் இருந்தோம். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான திட்டத்தைத் தேடிக்கொண்டிருந்தனர்.
ஆட்டத்தின் முதல் பாதி சிறப்பாகவே இருந்தது, ஆனால் அழுத்தமான நேரங்களில் பந்துவீச்சு திட்டங்களை செயல்படுத்துவதில் தவறு நடந்துவிட்டது. டிம் டேவிட் போன்ற மிக அதிரடியான வீரருக்கு எதிராகப் பந்துவீசும்போது, மிகவும் துல்லியமாக செயல்பட வேண்டும். ஒருமுறை நாம் பின்னடைவைச் சந்தித்து, அவர் தனது அதிரடி வேகத்தைப் பிடித்துவிட்டால், அவரைத் தடுப்பது கடினம். அதோடு ஒரு நோ-பாலும் வீசப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.
அதில் மட்டுமே சுமார் 40 ரன்கள் அடங்கியிருக்கிறது. இது போன்ற மிகச்சிறிய தவறுகளே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து பந்துவீச்சு அணிகளும் ஆடுகளத்திலிருந்து ஏதேனும் சிறு உதவியைப் பெறவும், அதிரடி பேட்டர்களைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறியவும் திணறிக்கொண்டிருக்கின்றன.
எனவே, இது பந்துவீச்சாளர்களுக்கு ஒரு கடுமையான போட்டியாகும்” என்றார். நடப்பு சீசனில் ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ள சிஎஸ்கே தனது டெத்-ஓவர் பந்துவீச்சு சிக்கல்களுக்கு விரைவில் தீர்வைக் காண வேண்டும். இல்லையெனில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணிக்கு இது மீண்டும் ஒரு சோகமான சீசனாக முடிந்துவிடும்.