

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த சீசனில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனால் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றன.
இப்போது பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள ஒரு இடத்தை பிடிக்க பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் உள்ளன.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. அந்த இரண்டிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை அந்த அணி பெறக்கூடிய வாய்ப்புள்ளது. அதுவே அடுத்த சுற்றுக்கு அந்த அணியை தகுதி பெற செய்து விடும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியம் ஒரு ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளை அந்த அணி பெறும் வாய்ப்புள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் அந்த அணி 15 புள்ளிகளை பெறும் வாய்ப்புள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 14 புள்ளிகளை பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அந்த அணியின் நெட் ரன் ரேட் மிக மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் மற்ற பிளே-ஆஃப் ரேஸில் உள்ள மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். குறிப்பாக மற்ற அணிகள் 14 புள்ளிகளை எட்டாத வரையில் டெல்லிக்கு வாய்ப்பு இருக்கும்.
இதேபோல வரும் வியாழக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் உடன் சிஎஸ்கே விளையாட உள்ளது. இதுவே நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி லீக் ஆட்டம் ஆகும். இதில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் பிளே-ஆஃப் போட்டியில் உள்ள மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
குறிப்பாக ராஜஸ்தான் (2 ஆட்டங்கள்), பஞ்சாப் அணிகள் விளையாடும் ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும். கொல்கத்தா - டெல்லி இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற வேண்டும். மும்பை உடனான ஆட்டத்தில் கொல்கத்தா தோல்வியை தழுவ வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். குஜராத் உடனான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவினால் முதல் சுற்றோடு வெளியேற வேண்டி இருக்கும்.