

சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ்
சென்னை: வரும் 11-ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ் களம்காண வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி விளையாடிய முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் தோல்வியை தழுவி உள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக இந்த மூன்று ஆட்டங்களில் சிஎஸ்கே அணியின் இளம் பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் விளையாடவில்லை.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் பிரெவிஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “ஏப்.11-ம் தேதி உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார். சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் களம் காண உள்ளதையே அவரது இந்த சூசக பேச்சு சுட்டுவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் போட்டி நடைபெறும் நாளில் ஆடும் லெவனில் அவர் இடம்பிடித்தால் மட்டுமே அது உறுதியாகும்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டெவால்ட் பிரெவிஸ், கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மாற்று வீரராக இணைந்தார். ஆறு ஆட்டங்களில் 225 ரன்களை அவர் விளாசினார். அணியின் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆடி எதிரணியை அவர் மிரட்டுவார். அவரது வரவு தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள சிஎஸ்கே அணிக்கு ஊக்கம் பெறும் என நம்பப்படுகிறது.