

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இணைந்து மொத்தம் 13 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. இருப்பினும், கடந்த சீசன் இந்த அணிகளுக்கு கடும் போராட்டமாகவே அமைந்தது.
கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும், அவர்களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை. 5 முறை சாம்பியன் என்ற அடிப்படையில் இம்முறை மும்பை அணி கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
கடந்த சீசனில் 10-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இந்த முறை அணியைப் பெரிதும் மாற்றியமைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்துள்ளார். மேலும், மேட் ஹென்றி, நூர் அகமது ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனது ஓய்வு குறித்த சஸ்பென்ஸைத் தொடர்ந்து நீட்டித்து வரும் எம்.எஸ்.தோனி இம்முறை சிறப்பான விடைபெறுதலை நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த முறை 8-வது இடம் பிடித்த கொல்கத்தா அணி தனது பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளது. டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆண்ட்ரே ரஸலுக்குப் பதிலாக ரிங்கு சிங் ‘பினிஷர்’ ரோலை ஏற்க உள்ளார். சுழலில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் பலமாக இருந்தாலும், முன்னணி வீரர்களின் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சுதுறை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 2-வது முறையாக கோப்பையை வெல்லப்போராடும். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களது முதல் பட்டத்தை வெல்வதற்கான வேட்டையைத் தொடங்கக்கூடும்.