

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் 6 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 9 மாத கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் ஜூன் 6 முதல் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 28 வரை அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான சேர்க்கை விண்ணப்பங்களை செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் கவுரவ இணைச் செயலாளர் வி.கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
மகளிர் கால்பந்து போட்டி: எம்ஓபி வைஷ்ணவா வெற்றி - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் மகளிர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ‘ஏ’ டிவிஷனில் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைஃப் ஸ்போர்ட்ஸ் அகாடமி 7-0 என்ற கோல் கணக்கில் ஃபுட்பால் பிளஸ் அணியை தோற்கடித்து. லைஃப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி தரப்பில் சுரேகா, விஜயா ஆகியோர் தலா 3 கோல்களும், கோகுலபிரியா ஒரு கோலும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 15-0 என்ற கோல் கணக்கில் ராணி மேரி கல்லூரியை தோற்கடித்தது. எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணி தரப்பில் ஷாலினி 8 கோல்கள் அடித்து அசத்தினார். அனிஷா 2 கோல்களும் யுவ, ஷிவானி , சஞ்ஜிகா பிரியா, காவிய லட்சுமி, சுபத்ரா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
யுகி பாம்ப்ரி, மைக்கேல் ஜோடிக்கு 2-வது இடம்: சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஏடிபி தொடரின் 250 புள்ளிகள் கொண்ட ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியானது மொனாக்கோவின் ரோமைன் அர்னியோடோ, ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மான்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் யுகி பாம்ப்ரி, மைக்கேல் வீனஸ் ஜோடி 6-3, 6-7(7), 7-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்தது.