

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக நமீபியா இன்று டெல்லியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இரவு நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள தங்களை அனுமதிவில்லை என நமீபியாவின் கேப்டன் எராஸ்மஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
“நமீபியாவில் அமைந்துள்ள மைதானங்களில் இரவு நேர மின்னொளியில் விளையாடும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அதற்கான கட்டமைப்புகள் அங்கு இல்லை. அதனால் மின்னொளியில் விளையாடும் வாய்ப்புகள் எங்களுக்கு பெரிதும் அமையவில்லை. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் நேபாள பிரீமியர் லீக், ஐஎல்டி20 மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி அந்த அனுபவத்தை பெற்றுள்ளனர்.
இந்தச் சூழலில் இந்த ஆட்டத்துக்கு நாங்கள் தயாராகும் வகையில் மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. நமீபியா மக்களுக்கே உள்ள போராட்ட குணத்தை கொண்டு நாங்கள் இந்த ஆட்டத்தை எதிர்கொள்வோம்” என எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் எராஸ்மஸ் வைத்துள்ள குற்றச்சாட்டை ஐசிசி மறுத்துள்ளது. தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் பயிற்சி மேற்கொள்வதற்கான கால அட்டவணை ஜனவரி 27-ம் தேதி கொடுக்கப்பட்டுவிட்டது. இரவு நேர பயிற்சி தொடர்பாக நமீபியா அணியின் கோரிக்கை செவ்வாய்க்கிழமை அன்றுதான் வைக்கப்பட்டது. அதனால் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளது.
டெல்லியில் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மேற்கொள்ள நமீபியா அணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்திய அணி அதன் பிறகு பயிற்சி மேற்கொண்டதாக தகவல். அப்போது இந்திய அணி உடன் கனடா வீரர்களும் பயிற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.