

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான பளுதூக்குதலில் +110 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் ஒட்டுமொத்தமாக 388 கிலோ எடையை (ஸ்னாட்ச் 176 + கிளீன் அன்ட் ஜெர்க் 212) தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். நியூஸிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூலிதி 389 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
பஞ்சாபை சேர்ந்த லவ்பிரீத் சிங் ஒரு கட்டத்தில் 10 கிலோ எடையை கூடுதலாக தூக்கி முன்னிலையில் இருந்தார். ஆனால் டேவிட் ஆண்ட்ரூ லிதி தனது கடைசி முயற்சியில் 223 கிலோ எடையை தூக்கி அசத்தினார். அதேவேளையில் லவ்பிரீத் சிங் தனது கடைசி வாய்ப் பில் 217 கிலோ எடையை தூக்கத் தவறினார்.
மகளிருக்கான +86 கிலோ எடைப் பிரிவில் 18 வயதாகும் இந்தியாவின் மார்ட்டினா தேவி ஸ்னாட்ச் பிரிவில் முதல் 2 முயற்சியிலும் தோல்வி அடைந்த நிலையில் கடைசி முயற்சியில் 105 கிலோ எடையை தூக்கினார். ஒட்டுமொத்தமாக அவர், 245 கிலோ எடையை (ஸ்னாட்ச் 105 + கிளீன் அன்ட் ஜெர்க் 140) தூக்கினார். இருப்பினும் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 144 கிலோ மற்றும் 146 கிலோ எடையைத் தூக்கும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட தவறியதால் கவுண்ட்பேக் விதியின் அடிப்படையில் நான்காம் இடத்தை நழுவவிட்டார்.
சீமா காளிராம்னா
மகளிருக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனையான சீமா காளிராம்னா 3 முறை ஃபவுல் செய்த போதிலும் அதன் பின்னர் 58.65 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை யான நிதி ராணி 55.67 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்தார். ஜமைக்காவின் சமந்தா ஹால் (61.66) தங்கப் பதக்கமும், கனடாவின் ஜூலியா டங்க்ஸ் (60.67) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
தஜிந்தர் பால் ஏமாற்றம்
ஆடவருக்கான குண்டு எறிதலில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களான தஜிந்தர்பால் சிங் டூர் 20.27 மீட்டர் தூரமும், சமர்தீப் சிங் கில் 20.03 மீட்டர் தூரமும் எறிந்து முறையே 5 மற்றும் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இதுவரை இந்தியா பதக்கம் வென்றது இல்லை. இந்த சோகம் இம்முறையும் தொடர்கிறது.
நைஜீரியாவின் சுக்வுபுக்கா எனெக்வெச்சி 21.07 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். நியூஸிலாந்தின் டாம் வால்ஷ் (21.03) வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்தின் ஸ்காட் லிங்கன் (20.70) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
தேஜஸ்வின் சங்கர்
ஆடவருக்கான டெகத்லானில் பதக்கப் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் நீடிக்கிறார். 5 நிகழ்வுகளுக்குப் பிறகு முதல் நாளின் முடிவில் அவர், 4,339 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். தேஜஸ்வின் சிங்கர், கனடாவின் டேமியன் வார்னரை (4,353) விட 14 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ளார். தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் 2.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி 944 புள்ளிகளைப் பெற்றார். அதே வேளையில், நீளம் தாண்டுதலில் 7.82 மீட்டர் தாண்டி 1,015 புள்ளிகளை குவித்தார்.
அனிமேஷ் குஜூர்
ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டம் அரை இறுதியில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.65 வினாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
லான் பவுல்ஸ்
லான் பவுல்ஸ் அணிகள் பிரிவில் இந்தியாவின் நவ்னீத் சிங், தினேஷ் குமார் ஜோடியானது ஃபாக்லாந்து தீவுகளைச் சேர்ந்த பார்ன்ஸ், ஆலிவர் தாம்சன் ஜோடியை 6–3, 10–1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இந்திய ஜோடிக்கு இது தொடர்ச்சியான 4-வது வெற்றியாக அமைந்தது. தொடர்ச்சியான வெற்றிகளால் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறுவதற்கான வலுவான போட்டியாளர்களாக இந்தியர்கள் தொடர்ந்து திகழ்கின்றனர். இந்திய ஜோடி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
பருல் சவுத்ரி 13-வது இடம்
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:08.56 வினாடிகளில் கடந்து 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியாவின் ரோஸ் டேவிஸ் (14:44.53) தங்கப் பதக்கமும், ஜெசிகா ஹல் (14:45.01) வெள்ளிப் பதக்கமும், ஸ்காட்லாந்தின் மீகன் கெய்த் (14:49.10) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
4x400 மீட்டர் தொடர் ஓட்டம்
4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் விஷால் டி.கே. அனிஷா பாபு, ராஜேஷ் ரமேஷ், ராஷ்தீப் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:20.98 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.