

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரரான முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டின் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஸ்ரீசங்கர் பெற்றார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். ஜமைக்காவின் தாஜே கெயில் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கமும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கென்சி (8.08) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பாரா தடகளத்தில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் டி 47 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் திலீப் மஹது காவிட் பந்தய தூரத்தை 10.71 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான முகமது பாசில் 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் (10.85) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
நடப்பு காமன்வெல்த் போட்டியில் திலீப் மஹது காவிட் வென்றது இந்தியாவின் 3-வது தங்கப் பதக்கமாக அமைந்தது. ஏற்கெனவே மகளிருக்கான பளுதூக்குதலில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானுவும், பாரா தடகளத்தில் மகளிருக்கான குண்டு எறிதல் எஃப் 57 பிரிவில் ஷர்மிளா தன்கரும் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.
குத்துச்சண்டையில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எலிஸ் க்ளின்னை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை ஜாஸ்மின் லம்போரியா உறுதி செய்துள்ளார். இதுவரை குத்துச்சண்டையில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
இது கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டையில் வென்ற பதக்கங்களை விட அதிகமானதாகும். அந்தத் தொடரில் இந்தியா குத்துச்சண்டையில் 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
தடை தாண்டும் ஓட்டம்
ஆடவருக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர்யஷஸ் பலக் ஷா ஹீட் 2-ல் பந்தய தூரத்தை 49.51 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான சந்தோஷ் தமிழரசன் ஹீட் 1-ல் இலக்கை 49.65 வினாடிகளில் எட்டி 3-வது இடம் பிடித்து இறுதிப் போட்டியில் கால்பதித்தார்.
மன்பிரீத் கவுர் ஏமாற்றம்
மகளிருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் இறுதிப் போட்டியில் 17.49 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
லான் பவுல்ஸ்
லான் பவுல்ஸ் போட்டியில் ஆடவர் அணிகள் பிரிவில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நமீபியாவை 5-3, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தியது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் நயன்மணி சை 2-0 என்ற கணக்கில் ஐல் ஆஃப் மேன் நாட்டைச் சேர்ந்த கரோலின் ஒயிட்ஹெட்டை வீழ்த்தினார்.
நீச்சல்
நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் பந்தய தூரத்தை 1.51.99 வினாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 20-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஆர்யன் நெஹ்ரா பந்தய தூரத்தை 15:36.25 விநாடிகளில் எட்டி 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியாவின் சாம் ஷார்ட் ( 14:42:11) தங்கப் பதக்கமும், வடக்கு அயர்லாந்தின் டேனியல் விஃபென் (14:44.70) வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் பெஞ்சமின் கோடெமன்ஸ் (14:49.50) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
பிரவீன் சித்ரவேல்
ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தகுதி சுற்றில் இந்திய வீரரான பிரவீன் சித்ரவேல் 16.41 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு முதல் 2 முயற்சிகளிலும் ஃபவுல் செய்தார். எனினும் அடுத்த வாய்ப்பில் 16.26 மீட்டர் தூரம் தாண்டி இறுதி சுற்றில் நுழைந்தார். இறுதிப் போட்டி நாளை (1-ம் தேதி) நடைபெறுகிறது
விஷால்
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டம் அரை இறுதி சுற்று ஹீட்டில் இந்தியாவின் விஷால் டிகே பந்தய தூரத்தை 46.33 வினாடிகளில் எட்டி 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் விஷால் வெளியேறினார்.
இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா
ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் ஒலிம்பிக் நாயகனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ரோஹித் யாதவ் 78.37 மீட்டர் தூரமும், யஷ்விர் சிங் 78.36 மீட்டர் தூரமும் ஈட்டியை செலுத்தி முறையே 9 மற்றும் 10-வது இடங்களை பிடித்து இறுதி சுற்றில் கால்பதித்தனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் எந்த வீரரும் நிர்ணயிக்கப்பட்ட 84 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து நேரடியாக தகுதி பெற முடியாமல் போனது. 4 வீரர்கள் மட்டுமே 80 மீட்டர் தூரத்தை தொட முடிந்தது. இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே 82.84 மீட்டர் தூரம் எறிந்து முதலிடமும், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (81.29) 2-வது இடமும், பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (78.63) 7-வது இடமும், டிரினிடாட் & டோபாகோவின் கேஷோர்ன் வால்காட் (78.26) 11-வது இடமும் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.